Rain water harvesting-led awareness
செ.வெ.எண்:-07/2025
நாள்:-03.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(03.11.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழகத்தில் நீராதாரத்தை பெருக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும், மழைநீரை சேகரிக்கவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களிலும், பூமியில் மட்டுமே நிலம், நீர், காற்று இருப்பதனால் பலதரப்பட்ட உயிரினங்கள் வாழ தகுதி உள்ளதாக இருக்கிறது. அதில் உயிரினங்கள் உயிர் வாழ, தண்ணீர் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். பூமியின் மீதுள்ள மொத்த தண்ணீரின் அளவு 1.47 மில்லியன் கன மீட்டர் ஆகும். நீரின் படைப்பு விதிகளின்படி, தண்ணீரின் அளவு பூமி தோன்றிய நாளிலிருந்து அளவு மாறாமல் இருக்கிறது. இனியும் வரும் காலங்களிலும் அளவு மாறாமல் இருக்க வேண்டும்.
நீரியல் சுழற்சியில் தண்ணீர், மேகம், ஆறு, நிலத்தடி நீர் மற்றும் கடல் நீர் என பல்வேறு தன்மைகளில் உள்ளது. இவற்றில் இயற்கையில் பொழியும் மழை நீரானது முதன்மை நீராதாரமாகும். இங்ஙனம் பொழியும் மழை நீரை சேமித்தல் என்பது எதிர்கால தலைமுறையினருக்கு நாம் செய்யும் கடமையாகும். நமது மூதாதையர்கள் மழை நீரை சேமித்து வைத்து ஆண்டு முழுவதும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பொழியும் மழை நீரில், 20 சதுர மீட்டர் கொண்ட பரப்பளவில் சேமித்து வைத்தாலே 5 நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு ஆண்டு முழுவதும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.
மழை நீரை சேமிப்பதால் பல்வேறு நன்மைகளை தருகிறது. இயற்கையாக பொழியும் மழைநீர் குறைந்த அளவு உப்புகளையே கொண்டுள்ளது. ஆகவே, இல்லம்தோறும் மழைநீர் சேமிப்பதை அனைவரும் கடமையாக கொள்ள வேண்டும்.
நிலத்தடி நீர் அதிக அளவு தாழ்ந்து போகும்போது, நீரின் தரம் தாழ அதிக வாய்ப்பு உள்ளது. மழைநீர் சேகரிப்பின் மூலம், நிலத்தடி நீரின் அளவு தாழ்ந்து போகாமல் தடுப்பதுடன், நீரின் தரம் குறையாமல் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, பொழிகின்ற மழையை வீண் போகாமல் காப்பது, மழையற்ற காலங்களில் தண்ணீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய வழிவகுக்கும்,
திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டில் சமூக பொறுப்பு நிதி திட்டத்தின்கீழ் 20 ஏரிகள், குளங்கள் பணிகள் ரூ.98.56 இலட்சம் மதிப்பீட்டிலும். மாநில நிதியின்கீழ் 252 பணிகள் ரூ.13.82 கோடி மதிப்பீட்டிலும். 2025-26ஆம் ஆண்டில் சமூக பொறுப்பு நிதி திட்டத்தின்கீழ் 5 பணிகள் ரூ.35.20 இலட்சம் மதிப்பீட்டிலும், மாநில நிதியின்கீழ் 156 பணிகள் ரூ.6.42 கோடி மதிப்பீட்டிலும், 2024-2025 Go-50-ன்படி ஆம் ஆண்டில் 96 மேல்நிலைத்தொட்டி கட்டும் பணிகள் மற்றும் 52 ஏரிகள், குளம், குட்டைகள் சீரமைக்கும் பணிகள் என மொத்தம் 581 பணிகள் ரூ.21.58 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் 301 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மழைநீர் சேகரிப்பு தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த குறும்படங்கள், திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன வீடியோ வாகனம் மூலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திரையிட்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாகப் பொறியாளர் திரு.வி.மனோகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சு.ஜெகவீரபாண்டியன், உதவி நிர்வாகப் பொறியாளர் திரு.எஸ்.அப்துல் ஹக்கீம், துணை நிலநீர் வல்லுநர் திரு.விஜய பாஸ்கரன், உதவிப்பொறியாளார் திரு.ஜெ.முகம்மது ஹாரித், இளநிலை வரைவு அலுவலர் திரு.பயாஸ் பர்ஹான் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.