Close

Coffiee with collector

Publish Date : 05/11/2025
.

செ.வெ.எண்:-10/2025

நாள்:-03.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

‘Coffee with Collector’ – கொடைக்கானல் ஒன்றியத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 27.10.2025 வரை 17 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 325 மாணவ/மாணவியர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 30 பேர், மருத்துவர்கள்/செவிலியர்கள் 25 பேர், விவசாயிகள் 37 பேர், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் 26 பேர் மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று (03.11.2025) பதினெட்டாவது நிகழ்வாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒன்றியத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் 25 நபர்களுடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை சார்பில் கோவை மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தில் பழங்குடியின இளைஞர்களுக்கான ஒரு மாத “திறன் மேம்பாட்டுப் பயிற்சி” இம்மாதம் 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கொடைக்கானல் ஒன்றியம் பாச்சலூர், பூதமலை, கடைசிக்காடு, கே.சி.பட்டி, கோரன்கொம்பு, கடமன்ராவு, கடுகுதடிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 25 பழங்குடியின இளைஞர்கள் பயிற்சி பெற உள்ளனர். அவர்களிடம் பழங்குடியினர் நலன் தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக எடுத்துரைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதும், அப்பகுதி இளைஞர்கள் படித்து வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்வதும் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாகும். ஒரு தலைமுறையையே மாற்றும் வல்லமை கல்விக்கு உண்டு. அக்கல்வி மூலம் பெறும் வேலைவாய்ப்பு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். வேலை ஒன்றே இளைஞர்களுக்கான அடையாளம் ஆகும். பேச்கைக் காட்டிலும் செயல்பாடு வெற்றிக்கு வழிவகுக்கும். ஒரு மாத பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் அனைவரும் வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்திட வாழ்த்துகள். புதிய விக்ஷயங்களைக் கற்றுக்கொள்ளும்போது அதற்கான சீரிய உழைப்பு முக்கியம், பயிற்சியின் மூலம் பெறும் வேலைவாய்ப்பு சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாகத் திகழும். கோவையில் பயிற்சி பெற்றுத் திரும்பும்போது அனைவரும் பணிவாய்ப்பு பெற்றுத் திரும்பிட வாழ்த்துகள் என கலந்துரையாடலின்போது மாவட்ட ஆட்சியர் ஊக்கமூட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.மு.ராஜேஸ்வரி சுவி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ப.ராஜகுரு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.அ.ராப்சன் டேவிட், மாவட்ட திறன் அலுவலர் திருமதி.பொ.பவித்ரா, கோவை மத்திய வேளாண் பொறியியல் நிறுவன பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர்.மு.முத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.