ELECTION
செ.வெ.எண்:-15/2025
நாள்:-04.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் இன்று முதல் (04.11.2025) வீடுவீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் இன்று முதல் (04.11.2025) வீடுவீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வருகின்ற 04.12.2025-அன்று வரை வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் -2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடிகளுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர்களால் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கெடுப்பு படிவம் (Enumeration Form) வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கணக்கெடுப்பு படிவம் வழங்குவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தொடங்கி வைத்து BLO App தொடர்பான செயல்முறை பயிற்சியினையும் வழங்கினார். மேலும், மேற்படி பணியினை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மேலும், இப்பணிக்கு வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், அரசு சார்ந்த தன்னார்வலர்கள் (Volunteers) மற்றும் தேர்தல் பிரிவில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக தங்களது வீடு தேடி வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் திரு.செந்தில்முருகன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திரு.பாண்டியராஜன் அவர்கள் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.