Close

HON’BLE MINISTERS – EDUCATION DEPT

Publish Date : 12/11/2025
.

செ.வெ.எண்:-43/2025

நாள்: 11.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (11.11.2025) திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.

முன்னதாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நூற்றாண்டு விழாவினை சிறப்பித்து வாழ்த்து செய்தி தெரிவித்த ”குறும்படம்” மாணவர்களுக்கு திரையில் ஒளிப்பரப்பப்பட்டது. மேலும், பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஐய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு, நுழைவு வாயில் திறப்பு மற்றும் நூற்றாண்டு மலர் புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சிகளை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் பரிசுப் பொருட்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.

இவ்விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு பள்ளிக்லவித் துறைக்கு அதிகளவில் நிதியொதுக்கீடு செய்து வருகிறார்கள். பல்வேறு துறைகள் இருந்தாலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ”பள்ளிக்கல்வித் துறை” மற்றும் ”மருத்துவத்துறை” இரண்டு துறைகளும் இரண்டு கண்கள் ஆகும். மேலும், இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள். இத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நாடுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், தமிழ் வழியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். மேலும், கல்லூரிகளில் பயிலும் 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் விளங்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள். மேலும், மாதந்தோறும் மாணவர்களை ”கல்வி இன்பச் சுற்றுலா” அழைத்து செல்லப்பட்டு கல்வியின் இன்றியமையாமை குறித்து விளக்கப்படுகிறது.

மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தொடங்கி வைத்தார்கள். அவர்கள் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை சிறப்பிக்கும் வகையில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை தொடங்கி வைத்துள்ளார்கள்.

மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் தமிழ்நாட்டில் 12,525 ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி நூலகத்தை தொடங்கி வைத்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு இந்நூலகங்களை சீரமைத்தார். மேலும், ஆத்தூர், நத்தம், ரெட்டியார்சத்திரம், பழனி, கள்ளிமந்தையம் உள்ளிட்ட 5 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. விருப்பாட்சி, குஜிலிம்பாறையில் தொழிற்பயிற்சி நிலையம் அமைப்பதற்கு முன் அனுமதி பெறப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

மேலும், ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தலில் சொல்லிய வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளையும் செய்து சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ”திரவிட மாடல்” ஆட்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மாணவ, மாவணவிர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகளவில் நிதியொதுக்கீடு செய்து வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் செயல்பட்டு வரும் பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியானது கடந்த 1918-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதனடிப்படையில், இன்றைய தினம் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் நடைபெறும் விழாவினை நூற்றாண்டு விழா என்று சொல்வதைக் காட்டிலும், முப்பெரும் விழா என்று சொல்வது மிகையாகாது. ஏனென்றால், இப்பள்ளியில் ஐய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு, நுழைவு வாயில் திறப்பு மற்றும் நூற்றாண்டு மலர் புத்தகம் வெளியீடு உள்ளிட்ட 3 நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் தற்போது படிக்கும் மாணவர்களைப் போல உற்சாகத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்காற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

விடுதலை இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பதவி வகித்த அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளினை ஆண்டுதோறும் தேசிய கல்வி நாளாக கொண்டாடப்பட்டு வரும் இன்றைய தினத்தில் கொண்டாடப்பட்டு வரும் நூற்றாண்டு விழாவானது சிறப்பான ஒரு நிகழ்வாகும். மேலும், 2024-2025-ஆம் கல்வியாண்டில் ”விழுதுகள்” என்ற பெயரில் முன்னாள் மாணவர்களை கொண்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததன் அடிப்படையில், 2201 பள்ளிகளில் பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்று வரும் இந்த நூற்றாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முன்னாள் மாணவ, மாணவியர்கள் பல்வேறு துறைகளில் ஆளுமைகளாக விளங்கி வருகிறார்கள். இதனை கருத்திற்கொண்டு இளைய தலைமுறையினராகிய நீங்கள் அனைவரும் அவர்களைப்போல் நாமும் உயர் பதவி வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46.867 கோடி நிதியொதுக்கீடு செய்து வருகிறார்கள்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ”இல்லம் தேடி கல்வி” ”எண்ணும் எழுத்தும் திட்டம்” உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்களாகிய நீங்கள் பெற்றோர்கள், ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் நமது முன்னேற்றத்திற்காக உழைத்து வருகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். படிப்பு ஒன்றுதான் நமது வாழ்க்கையை மேம்படுத்தும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தமது குழந்தைகளை மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது. பெற்றோர்கள், ஆசிரியர் பெருமக்கள் மாணவர்களுக்கு எதில் திறமை உள்ளது என்பதை கண்டறிந்து அத்திறமையை ஊக்குவித்து வாழ்வில் வெற்றியடைய செய்ய வேண்டும். கடந்த காலத்தில் ஐஐடி, சட்டம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் 75 மாணவர்கள் மட்டுமே சேர்ந்து கல்வி கற்று வந்தனர். அதில், அரசுப் பள்ளிகளில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டுமே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, இந்நிறுவனங்களில் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை 2097-ஆக உயர்ந்துள்ளது. இவர்கள்தான் இளைய தலைமுறையினருக்கு தூதுவர்களாக விளங்க உள்ளார்கள்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22 ஆயிரத்து 931 தொடக்கப்பள்ளிகளில் ”ஸ்மார்ட் போர்டு” வகுப்பறைக் கற்றல் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். மாணவச் செல்வங்களாகிய நீங்கள் இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறைகளையும் தன்னுடைய துறையாக எண்ணி புதிய புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ”கல்வியும், சுகாதாரமும்” இரண்டு கண்களாகும். குறிப்பாக கல்வியை முன்மாதிரியாகக் கொண்டு நம்முடைய மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இந்த துறைக்கு தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழியில் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ”ஸ்மார்ட் போர்டு” வகுப்பறைக் கற்றல் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். இந்தியாவிலே எங்கு சென்று பார்த்தாலும் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு நம்முடைய ஆரம்பப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் எதிர்கால சந்ததியினர் தன்னுடைய அறிவை வளர்த்துக் கொள்வதற்காக கணிப்பொறி கம்ப்யூட்டர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 82% ஆகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழியில் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் சிறப்புக் திட்ட செயலாக்கத் துறையின் மூலமாக,’கல்லூரி கனவு’,’நான் முதல்வன்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டதின் வாயிலாக, திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 99.28% ஆகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் பேரில், திண்டுக்கல் மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக உயர்த்துவதற்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்களும் தமிழ்நாடு அரசின் மூலம் உட்கட்டமைப்பு வசதிகள், கிராம சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று வாழ்வில் உயர வேண்டும். முன்னாள் மாணவர்கள் எல்லாம் எவ்வாறு நல்ல தலைசிறந்த பொறுப்புகளில் பல்வேறு துறைகளிலே பங்காற்றி வருகிறார்கள் என்பதனை இளைய தலைமுறையினர் அறிந்து அவர்களைப் போல நாமும் வாழ்வில் உயர வேண்டுமானால் கல்வி கற்பது ஒன்றே நமது குறிக்கோள் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரி முடித்த மாணவ, மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பயிற்சி பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக ஒட்டன்சத்திரம் தொகுதியிலே காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கணைந்த குடிமைப் பணிகளுக்கான பயிற்சி மையம் சென்னைக்கு அடுத்தபடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு அரசுப் பணிகளில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

ஆளுமைகளை உருவாக்குவதற்கு அடித்தளமாக பள்ளிகள் விளங்கி வருகிறது. சின்ன குழந்தையாக இருந்தாலும், வயதானவராக இருந்தாலும் பள்ளி என்பது உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான இடமாகும். தன்னுடைய கனவுகளையும், தன்னுடைய இலட்சியங்களையும் நிறைவேற்றுவதற்கான முதல் படியாக இந்தப் பள்ளிகள் விளங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு பள்ளியை கௌரவித்தால் தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கமாக இருக்கும். அரசுப் பள்ளிகள் என்பது வெறும் கட்டிடங்கள் மட்டுமல்ல, அது ஆளுமைகளையும், அன்பையும் விதைக்கக்கூடிய ஒரு இடமாக உள்ளது. கல்வி மட்டும்தான் உங்களிடமிருந்து எவராலும் எடுத்துக் கொள்ளவோ, பறித்துக் கொள்ளவோ முடியாது. கல்வி மட்டும்தான் ஒரு தலைமுறையை மாற்றக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆயுதம். நம்முடைய பிறப்பு என்பது சாதாரண சம்பவமாக இருந்திருக்கலாம். நம்முடைய இறப்பு என்பது ஒரு சரித்திரமாக, சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில், திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ப.உஷா, பழனி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.மா.பரிமளா, பழனி நகராட்சி ஆணையர் திரு.ஆர்.டிட்டோ, தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் திரு.வி.ராமராஜ், முன்னாள் தலைமையாசிரியர் திரு.மனோகரன், பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி.ம.சுதா மற்றும் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.