Close

Science Festival WebSite

Publish Date : 15/11/2025
.

செ.வெ.எண்:-58/2025

நாள்:-13.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் அறிவியல் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026 விழாவின் இணையத்தளம் வெளியீடு மற்றும் அறிவியல் தூதர் அறிமுக நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

2026-ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் அறிவியல் மற்றும் புத்தாக்கத் திருவிழாவினை முன்னிட்டுப் பல்வேறு அறிவியல் சார்ந்த முன்னெடுப்புகளைத் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தினர் எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக வியாழனன்று இணையத்தளம் வெளியீடு மற்றும் அறிவியல் தூதர் அறிமுகம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் www.dindigulsciencefest.com இணையத்தளத்தைத் திறந்து வைத்து அறிமுகம் செய்தார்.

மாநில அளவிலான இந்த அறிவியல் திருவிழாவில் முதல்முறையாக ஒரு வாரத்திற்குத் தொடர்ந்து விண்வெளியியல், பசுமை ஆற்றல், இயந்திரவியல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட எட்டுக் கருப்பொருளில் நடைபெறுகிறது. இதன் வழியாக அறிவியல் விழிப்புணர்வையும் தொழில்நுட்ப ஆர்வத்தையும் மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும். அதில் அறிவியல் காட்சி அரங்கம், பயிலரங்கம், அறிவியல் ஆளுமைகளின் கருத்தரங்கம், செயல்முறை விளக்கம், மெய் நிகர் விளையாட்டுக்கள், சுரும்பூர்தி (drone) அணிவகுப்பு போன்ற பல்வேறு நவீன நிகழ்வுகள் எம்.எஸ்.பி. பள்ளியின் கருத்தரங்க வளாகத்தில் 2026 ஜனவரி 28-பிப்ரவரி 3 வரை நடைபெறவுள்ளன. இதில் மாநில அளவில் பல்வேறு கல்லூரி மாணவர்களும் தொழில்முனைவோர்களும், அறிவியல் ஆர்வலர்களும் கலந்து கொண்டு தங்கள் அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்தலாம். அதற்கான முன்பதிவை www.dindigulsciencefest.com இணையத்தளம் வழியாகச் செய்யலாம். மேலும் இந்நிகழ்வில் அறிவியல் திருவிழாவைப் பரப்புரை செய்யும் அறிவியல் தூதர்களையும் அறிமுகம் செய்து பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் அளித்தார்.

இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி ர.கீர்த்தனா மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கல்வி) திரு. இரா.சரவணக்குமார், அறிவியல் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜெ.தினகரன், முதலமைச்சர் கணினித் தமிழ் விருதாளர் திரு.நீச்சல்காரன் இராஜாராமன், மரு.ஜெ.ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

..