TET Examination Center Inspection
செ.வெ.எண்:-69/2025
நாள்: 16.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
ஆசிரியர் தேர்வு வாரியம் TET தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தேர்வு வாரியம் TET தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(16.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆசிரியர்தேர்வு வாரியத்தினால் ஆசிரியர் தகுதித்தேர்வினை நடத்த கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்திருந்த அனைத்துத் தேர்வர்களுக்கும் 15.11.2025 மற்றும் 16.11.2025 முற்பகல் தேர்வு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில், 15.11.2025 அன்று நடைபெற்ற TET 1 தேர்வினை எழுத 3490 நபர்களுக்கு அழைப்பானை அனுப்பி வைக்கப்பட்டதில் 2976 தேர்வர்கள் 11 தேர்வு மையங்களிலும், இன்று (16.11.2025) நடைபெற்ற TET 2 தேர்வினை எழுத 10,934 நபர்களுக்கு அழைப்பானை அனுப்பி வைக்கப்பட்டதில் 9798 தேர்வர்கள் 36 தேர்வுமையங்களில் இன்று எழுதுகின்றனர். இத்தேர்வில் கூடுதல் சலுகை நேரம்கோரி 203 பேர் (PWD CANDIDATES) விண்ணப்பித்துள்ளனர் மற்றும் 34 பேர் (SCRIBE CANDIDATES) சொல்வதை எழுதுபவர் கோரி விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வினை நன்முறையில் நடத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தின் பிறதுறைகளும் இணைந்து தேர்வர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதி, அவசரகால மருத்துவ உதவி, தடையில்லா மின்சார வசதி, சுகாதரம் மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு எழுத ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் காவல்துறைப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மந்தனக்கட்டுகள் காவல்துறை பாதுகாப்புடன் தேர்வுமையங்களுக்கு வழித்தட அலுவலர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கண்காணிப்புக்குழு ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு தேர்வுமையமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக் கல்வித்துறையின் கண்காணிப்பு அலுவலரான இணை இயக்குநர்(மேல்நிலைக் கல்வி), முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் இணைந்து அனைத்துத் தேர்வுமையங்களிலும் தேர்வுப்பணிகள் நன்முறையில் செயல்பட கண்காணித்து வருகின்றனர்.
மேலும் நிலையானபடை உறுப்பினராக இரண்டு ஆசிரியர்கள் ஒவ்வொரு தேர்வுமையத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்விற்காக மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் என மொத்தமாக 1450 பேர் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துத் தேர்வு மையங்களிலும் உள்ள தேர்வர்கள் அனைவரும் தேர்வினை நன்முறையில் எழுத, மாவட்ட நிர்வாகத்தினால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.