Close

Science Festival 2026

Publish Date : 13/12/2025
.

செ.வெ.எண்:-33/2025

நாள்:-12.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

”அறிவியல் திருவிழா 2026” தொடர்பான ஆயத்தக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(12.12.2025) ”அறிவியல் திருவிழா 2026” தொடர்பான ஆயத்தக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அறிவியல் விழிப்புணர்வையும், அறிவியல் அணுகுமுறைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாநில அளவிலான ‘அறிவியல் திருவிழா 2026’ திண்டுக்கல் எம்.எஸ்.பி.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 28.01.2026 முதல் 03.02.2026 வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மட்டுமல்லாமல் அறிவியல் ஆர்வம் கொண்ட பிற மாவட்ட மாணவ/மாணவியர், ஆசிரியர்கள், தொழில்முனைவோர், வல்லுநர்கள், பொதுமக்கள் என்று பலரும் கலந்து கொள்ளக் கூடிய ஏழு நாள் திருவிழாவாக இது அமையவுள்ளது. இத்திருவிழாவின் கருப்பொருளாக அறிவியல், தொழில்நுட்பம், அறிவியல்சார் தொழில்முனைவு ஆகியவை உள்ளன. இக்கருப் பொருளினைக் கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அறிவியல் தொடர்பான விழிப்புணர்வையும், புதிய அறிவியல் அறிஞர்களை வெளிக்கொணரவும், தொழில் வளர்ச்சியையும் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பதின்பருவ மாணவ/மாணவியரிடம் அறிவியல் தொடர்பான ஆர்வத்தை ஊக்குவித்து, உயர்கல்வியில் அறிவியல் தொடர்பான நாட்டத்தை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு, அறிவியல் ஆளுமைகளின் உரைகள், அறிவியல் செயல்முறை விளக்கங்கள், அறிவியல் கண்காட்சிகள், தொழில்நுட்பப் பயிற்சிப்பட்டறைகள், திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் போன்றவை மாநாட்டு நாட்களில் நடைபெறுகின்றன.

அதற்கு முன்னர், மாநாட்டு முன் நிகழ்வாக அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள், அறிவியல் மொழிபெயர்ப்புகள், அறிவியல் நிரலாக்கப்போட்டிகள், இணையவழிக் கருத்துரைகள், அறிவியல் சுற்றுலா, அறிவியல் திரைப்படத் திரையிடல்கள், நகரும் அறிவியல் நூலகங்கள், அறிவியல் செயல்முறை வாகனங்கள், அறிவியல் தமிழ் மின் உள்ளடக்கங்கள் போன்ற பரப்புரையுடன் கூடிய பல போட்டி அறிவிப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உக்ஷா,அறிவியல் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் போராசிரியர் திரு.இரா.மனோகரன், திரு.ஜெ.தினகரன், முதலமைச்சர் கணினித் தமிழ் விருதாளர் திரு.நீச்சல்காரன் இராஜாராமன் உள்ளிட்ட அலுவலர்கள்/ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.