PMGSY Scheme 25th Year – Special Seminar
செ.வெ.எண்:-31/2025
நாள்:-12.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
“பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம்” 25-ஆம் ஆண்டு விழாவின் சிறப்பு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இன்று (12.12.2025) “பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம்” 25-ஆம் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக சிறப்பு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு 25 ஆண்டு காலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இத்திட்டத்தின் கீழ் சாலைப் பணிகள் மேம்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, தமிழ்நாடு அரசின் மூலம் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். குறிப்பாக, கிராமப் பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என்ற நோக்கிலும், பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களை ஒன்றிணைக்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைகளின் தரத்தினை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள் உள்ளன. சாலைப் பணிகளை ஆய்வு செய்யும் பொறியாளர்கள் இக்கருவிகளை பயன்படுத்தி சாலைகளின் தரத்தினை உறுதி செய்திட வேண்டும்.
சாலைப் பணிகள் மற்றும் பாலங்கள் கட்டுமானப் பணிகளில் பணிபுரியும் பணியாளர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமாகும். பாதுகாப்பு கவசங்கள் இன்றி பணிபுரியும் போது விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. விபத்துக்கள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கையாக அனைத்து வித பாதுகாப்பு நடவடிக்கையுடன் பணிகள் தொடங்கப்பட வேண்டும். விபத்துக்கள் ஏற்பட்டு பணியாளர்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை சாலைப் பணிகளை ஆய்வு செய்யும் பொறியாளர்கள் உணர்தல் வேண்டும்.
மேலும், கண்டுபிடிப்பாளர்கள் தொழில்நுட்பத்துறையில் புதிது புதிதாக கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு தொழில்நுட்பத்துறையினை மேம்படுத்தி வருகிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் அனைவரும் தங்களுடைய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணிபுரியும் துறையில் எந்த அளவிற்கு முழு ஈடுபாட்டுடனும், திறமையாகவும் பணியினை செய்கிறோம் என்பதைப் பொறுத்துதான் தனக்கான ஓர் இடத்தினை நாம் உருவாக்கிக்கொள்ள முடியும். இதனை கருத்திற்கொண்டு அனைவரும் தொழில்நுட்ப வளரச்சிக்கேற்ப தங்களுடைய திறனை வளர்த்துக்கொள்வது மிக மிக அவசியமான ஒன்றாகும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பெ.திலகவதி, செயற்பொறியாளர் திரு.செ.சக்தி முருகன், உதவி செயற்பொறியாளர்கள் திரு.ரா.ராதாகிருஷ்ணன், திரு.ம.வெற்றி வீரன், பி.எஸ்.என்.ஏ கல்லூரி கட்டடவியல் துறை தலைவர் டாக்டர்.பி.வேலுமணி, பொறியாளர் திரு.மு.ஹபீப் ரஹ்மான், ஊரக வளர்ச்சித் துறை உதவி பொறியாளர்கள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.