The Hon’ble Food and Civil Supply Minister -Emp Private Job Fair
செ.வெ.எண்:-39/2025
நாள்:-13.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு பெற்ற 712 வேலைநாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லுாரியில் இன்று(13.12.2025) நடத்தப்பட்ட மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு பெற்ற 712 வேலைநாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசின் மூலம் கல்வி மேம்பாட்டிற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு ஆண்டுதோறும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற அன்றைய தினமே நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்தினார்கள். தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய கல்லுாரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லுாரிகள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லுாரிகள் மற்றும் விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பழனியில் சித்தா மருத்துவக்கல்லுாரி, கொடைக்கானலில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி இணையம், குஜிலியம்பாறையில் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், காளாஞ்சிபட்டியில் 35 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகளும், தொப்பம்பட்டியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 353 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 15,05,940 வேலைநாடுநர்கள் பங்கேற்றதில் 2,84,754 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 10 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 45,156 வேலைநாடுநர்கள் பங்கேற்றதில் 9,054 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஒட்டன்சத்திரத்தில் 3 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 23,198 வேலைநாடுநர்கள் பங்கேற்றதில் 4,003 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
அந்த வகையில், இன்றைய தினம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 4-வது முறையாக இந்த வேலைவாய்ப்பு முகாம் இன்று நடத்தப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலமாக 712 வேலைநாடுநர்கள் பணி நியமனம் பெற்றனர். இதில் 281 ஆண் வேலைநாடுநர்கள் 428 பெண் வேலைநாடுநர்கள் மற்றும் 3 மாற்றுத்திறனாளிகள் பணிநியமனம் பெற்றனர். மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமில் அரசு துறை சார்ந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட திறன் பயிற்சி மையம், மாவட்ட தொழில் மையம், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் ஆகியவற்றின் அரங்குகளும் அமைக்கப்பட்டு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதன்முதலில் பெண்களின் நலனை கருத்திற்கொண்டு 1989-ஆம் ஆண்டு தர்மபுரியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஏற்படுத்தினார்கள். அவர்கள் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ஆண்டுதோறும் அதிகளவில் கடனுதவிகளை வழங்கி வருகிறார்கள். 2025-2026-ஆம் நிதியாண்டில் 12,595 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1113.00 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருஆவினன்குடி அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயிலின் குடமுழுக்கு விழா கடந்த 08.12.2025-அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஏற்கனவே காலைச் சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்படுவதை தொடர்ந்து, கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற வாய்ப்புகளை படித்த இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, போட்டித் தேர்வுகளில் பெற்றி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஒழுக்கம், கடின உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். மாணவ, மாணவிகள் உயர் பதவிகளை அடைந்து பெற்றோருக்கும், பள்ளி, கல்லுாரிக்கும் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என மாண்புமிகு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையினையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் துர்க்கையம்மன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டிலான வங்கிக்கடன் கடனுதவிகளையும் மாண்புமிகு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) திருமதி சே.திருமலைச்செல்வி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் திரு.த.அருண்நேரு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.அ.ராப்சன் டேவிட், ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் டாக்டர்.பிரதீப் டாம் செரியன், ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர்.கே.என்.தினகரன் அவர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.