Close

Coffee with collector

Publish Date : 16/12/2025
.

செ.வெ.எண்:-41/2025

நாள்:-15.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

‘Coffee with Collector’ – அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ/மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 24.11.2025 வரை 22 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 385 மாணவ/மாணவியர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 30 பேர், மருத்துவர்கள்/செவிலியர்கள் 25 பேர், விவசாயிகள் 37 பேர், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் 26 பேர், கொடைக்கானல் ஒன்றியத்தைச் சார்ந்த திறன் வளர்ப்புப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட 25 பழங்குடியின இளைஞர்கள், சமூக ஊடகவியலாளர்கள் 40 பேர் மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று (15.12.2025) இருபத்து மூன்றாவது நிகழ்வாக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் 27 மாணவ/மாணவியருடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாணவ/மாணவியரிடம் அவர்கள் பயின்று வரும் பாடப்பிரிவு, அதனைத் தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு அரசு எடுத்துவரும் சிறப்பு முன்னெடுப்புகளான நான் முதல்வன், வெற்றி நிச்சயம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், திறன் வளர்ப்புப் பயிற்சிகள், தமிழ்நாடு அரசு வழங்கும் வேலைவாய்ப்புகள், இரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம், பணியாளர் தேர்வு ஆணையம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அரசின் அமைப்புகளின் மூலமான வேலைவாய்ப்புகள் குறித்தும் விரிவாக விளக்கிக் கூறினார்.

மேலும், தற்போது தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று கொண்டிருக்கும்போதே தமது படிப்புகளுக்கான வேலைவாய்ப்பு என்னென்ன, அதனை எவ்வாறு பெறுவது என்பது குறித்தான தெளிவு அவசியம் எனவும், தினசரி நாளிதழ் வாசித்தல், வேலைவாய்ப்புச் செய்திகளை அறிதல், இளையதளத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துதல், திட்டமிடல், டிஜிட்டல் முறையில் சுயவிபரப்படிவத்தை தயார் செய்து வைத்திருத்தல், தொலைபேசிவழி நேர்காணலுக்கான பயிற்சி, தொழில்நுட்ப பயன்பாடு, அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களை மட்டும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு உரிய வழியில் பயன்படுத்துதல், போட்டித்தேர்வுகளுக்குத் தயார்செய்தல், சுயதொழில் தொடங்குதல், டிஜிட்டல் மார்க்கெட்டிங், அரசுப் பணி வாய்ப்புகள் என்னென்ன, தனியார் பணி வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்த விபரங்கள் அறிந்திருத்தல், சுயதொழில் புரிவதற்கான வங்கிக் கடன் உதவிகள், தம் துறை சார்ந்து குறைந்தது 3 அல்லது 4 வகையான வெவ்வேறு திறன்கள் பெற்றிருத்தல், தாம் பயின்ற படிப்பு தொடர்பான சான்றிதழ்களை உரிய அலுவலகங்களில் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு விக்ஷயங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் திரு.த.அருண்நேரு, மாவட்ட திறன் அலுவலர் திருமதி.பொ.பவித்ரா, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.டே.ஜெயரட்சகராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (கல்வி) திரு.அ.சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.