Close

TNEB – RALLY

Publish Date : 22/12/2025
.

செ.வெ.எண்:- 48/2025

நாள்:18.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பாக, பொதுமக்களுக்கு மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ”மின் சிக்கன வார விழா” பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பாக, பொதுமக்களுக்கு மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ”மின் சிக்கன வார விழா” பேரணியை இன்று (18.12.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டை அனைத்து நிலைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநிலமாகவும், அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாகவும் உயர்த்துவது நமது கடமை என்பதை இளைய தலைமுறையினராகிய நீங்கள் உணர வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டுதான் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில், இன்றைய தினம் ”மின் சிக்கன வார விழா” பேரணியானது தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இளைய தலைமுறையினராகிய நீங்கள் தான் மின்சாரத்தின் அத்தியாவசியம் குறித்து தெரிந்து கொள்ளவேண்டும். மேலும், மின்சாரத்தின் அத்தியாவசியம் குறித்தும், மின்சாரத்தின் சிக்கனம் குறித்தும் இளைய தலையினராகிய உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பாக ”மின் சிக்கன வார விழா” பேரணியானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பேரணியில் கலந்து கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் அனைவரும் மின்சாரத்தினை தேவையான நேரங்களில் மட்டுமே பயன்படுத்துவேன் என்றும், மின்சாரத்தை சேமிப்பதற்கு என்னால் முடிந்த அளவு ஒத்துழைப்பு நல்குவேன் என்றும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, ”மின் சிக்கன வார விழா” பேரணியானது திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் வழியாக வெள்ளை விநாயகர் கோவில் வரை நடைபெற்றது. இந்தப் பேரணியின் போது, மின்சாரத்தை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது என்பது குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.மூ.திருமலை, வட்ட பொறியாளர் (மேற்பார்வை பொறியாளர் பொறுப்பு) திரு.பி.சாந்தி, கோட்ட பொறியாளர் (செயற் பொறியாளர் பொறுப்பு) திரு.ஏ.நாகராஜன் மற்றும் உதவி செயற் பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் காந்திகிராம பல்கலை கழக மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.