Close

Certificate and Awards Distribution

Publish Date : 26/12/2025
.

செ.வெ.எண்:-63/2025

நாள்: 25.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற சமூக நீதி கல்லூரி விடுதி மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற சமூக நீதி கல்லூரி விடுதி மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிருவாக இயக்குநர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும். உருவாக பல்வேறு உன்னத திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

எனவே, கல்லூரியில் படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு ”புதுமைப்பெண்” மற்றும் ”தமிழ்புதல்வன்” திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இதுபோன்ற அரசின் திட்டங்களை பெற்று எதிர்காலத்தில் நல்ல முறையில் படித்து நல்ல நிலையை அடைய வேண்டும்.

தமிழ்நாடு அரசின் நல்லோசை களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சி தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு சமூக நீதி கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் பல்திறன் விளையாட்டுப் பேட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற விடுதி மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், நினைவுப் பரிசுகள், வெற்றிச் சான்றிதழ்கள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரி படிப்பு என்பது மிகவும் முக்கியமானது என்றும், விளையாட்டு மற்றும் கல்வி இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வாழ்வில் வெற்றி என்ற இலக்கை அடைய வேண்டும். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நேரம் கிடைக்கும் போது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும். நீங்கள் ஒரு முக்கியமான காலகட்டத்தில் உள்ளீர்கள். நீங்கள் அனைவரும் பல்வேறு சூழ்நிலையிலிருந்து வந்திருப்பீர்கள். நீங்கள் நல்ல முறையில் படித்து உங்கள் பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். கல்லூரி மாணவ, மாணவிகள் நல்ல முறையில் படித்து தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே உங்களுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பினை பயன்படுத்திகொண்டு நல்ல முறையில் படித்து உயர்வான பணிக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி, திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.ப.ராஜகுரு அவர்கள், திண்டுக்கல், வேடசந்தூர், கள்ளிமந்தையம் சமூக நீதி விடுதிகளைச் சேர்ந்த 137 வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் காப்பாளர், காப்பாளினிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.