Close

Achiever Study Center

Publish Date : 12/05/2025
.

செ.வெ.எண்:-35/2025

நாள்:-10.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட சாதனையர் பயிலகத்தை(Achievers Study Centre) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்.ஆ.ப. அவர்கள் திறந்து வைத்தார்.

திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட சாதனையர் பயிலகத்தை(Achievers Study Centre) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.05.025) திறந்து வைத்து, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காகவும், அவர்களை உயர் கல்வி படிக்க வைப்பதற்காகவும் போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளித்து அவர்களை போட்டித் தேர்வில் கலந்துகொள்ள செய்வதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நான் முதல்வன் திட்டம். புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உட்பட பல்வேறு திட்டங்கள் கல்வி மேம்பாட்டிற்காக செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி, அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பிக்கப்படுகிறது. அரசு வேலைக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகும் வேலைநாடுநர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு பயிற்சி திட்டங்களின் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதில் பயிற்சி பெற்றவர்களில் ஏராளமானோர் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று அரசு உயர் பதவிகளில் உள்ளர்.

போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. அதன்படி திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத ஒரு கட்டடம் சீரமைக்கப்பட்டு, தனியார் பங்களிப்புடன் சாதனையர் பயிலகம்(Achievers Study Centre) அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பள்ளி பாடப்புத்தகங்கள் மற்றும் போட்டித் தேர்வுக்குத் தேவையான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ன. இன்னும் ஏதேனும் புத்தகங்கள் தேவைப்பட்டால். அதையும் இங்கு வைக்க ஏற்பாடு செய்யப்படும். குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் துாய்மைப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையர் பயிலகம் (Achievers Study Centre) எந்நேரமும் திறந்து இருக்கும். உங்களில் ஒருவர் பொறுப்பாளராக இருந்து இந்த பயிலரங்கத்தை திறந்து பராமரித்து, நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாணவ, மாணவிகளின் தேவைகளை தெரியப்படுத்திட இங்கு ஒரு பதிவேடு பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் உங்கள் தேவைகளை எழுதி வைத்தால் போதும். அதைப்பார்த்து அவற்றை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் நம்பிக்கையுடன், முழு முயற்சியுடன் படிக்க வேண்டும் போட்டித் தேர்வுக்கு படிக்கும்போது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் குறிப்பெடுத்து படிப்பது மிகவும் அவசியம். எனவே கிடைக்கும் வாய்ப்புகளை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.

.

.