AGRI Collector Inspection
செ.வெ.எண்:-09/2024
நாள்:-08.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் நீர்வடிப்பகுதி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, ரூ.31.37 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட
பல்வேறு திட்டங்கள் வாயிலாக 7,683 விவசாயிகள் நேரடியாக பயனடைந்துள்ளனர், என தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் நீர்வடிப்பகுதி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் நீர்வடிப்பகுதி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் இயற்கை வள மேம்பாட்டு பணிகள் இனத்தில் தடுப்பணை அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், நீர்செறிவூட்டும் குழிகள் அமைத்தல், அமுங்கு குட்டை அமைத்தல் போன்ற பணிகளையும், பண்ணை உற்பத்தி பணிகள் இனத்தில் பழத்தோட்டம் அமைத்தல், வனக்கன்றுகள் விநியோகம், தார்பாலின் விநியோகம், தெளிப்பான்கள் விநியோகம், தீவனப்புல் வெட்டும் கருவி விநியோகம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் சாணார்ப்பட்டி வட்டாரம் கம்பிளியம்பட்டி நீர்வடிப்பகுதியில் ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, ரூ.50,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மழைநீர் செறிவூட்டல், ரூ.60,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நீர் உறிஞ்சு குழிகள் மற்றும் திரு.பெருமாள், திரு.சசிக்குமார் ஆகியோர் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மா தோட்டத்தையும், சிங்காரக்கோட்டை நீர்வடிப்பகுதியில் ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தடுப்பணை, திரு.தங்கவேல் அவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கால்நடை தீவனப்புல் வெட்டும் கருவியின் பயன்பாடு குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டம் – (PMKSY-WDC-2.0) சாணார்பட்டி, வடமதுரை, வேடசந்தூர், தொப்பம்பட்டி மற்றும் குஜிலியம்பாறை ஆகிய வட்டாரங்களில் உள்ள 28 கிராம ஊராட்சிகளில் 33 நீர்வடிப்பகுதிகளில் ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் உள்ள நீர்வடிப்பகுதி குழுக்கள் மூலம் 2021-2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இயற்கை வள மேலாண்மை, உற்பத்தி அமைப்பு, நிலம் இல்லாத நபர்கள், குறு நிறுவனங்கள் மற்றும் வணிக மேம்பாட்டிற்கான வாழ்வாதார நடவடிக்கைகள் என்ற வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டு முதல் இதுவரை பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, உலர்களங்கள் 15 இடங்களில் ரூ.49.15 இலட்சம் மதிப்பீட்டிலும், குளம் துார்வாரும் பணிகள் 26 இடங்களில் ரூ.62.23 இலட்சம் மதிப்பீட்டிலும், குடிநீர் குழாய் பதித்தல் பணிகள் 8 இடங்களில் ரூ.12.85 இலட்சம் மதிப்பீட்டிலும், விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி, மாநில அளவிலான பயிற்சி, மாநிலங்களுக்கிடையேயான பயிற்சிகளில் விவசாயிகளை பங்கேங்கச் செய்தல் மற்றும் மாவட்டங்களுக்குள் மற்றும் மாநில அளவில் விவசாய பகுதிகளுக்கு விவசாயிகளை அழைத்துச் செல்லுதல் என்ற வகையில் 61 வகையான பணிகள் ரூ.79.76 இலட்சம் மதிப்பீட்டிலும், பண்ணைக்குட்டைகள் 24 இடங்களில் ரூ.24.00 இலட்சம் மதிப்பீட்டிலும், சிறிய தடுப்பணைகள் 26 இடங்களில் ரூ.39.00 இலட்சம் மதிப்பீட்டிலும், நடுத்தர வகையிலான தடுப்பணைகள் 157 இடங்களில் ரூ.3.92 கோடி மதிப்பீட்டிலும், பெரிய அளவிலான தடுப்பணைகள் 287 இடங்களில் ரூ.13.65 கோடி மதிப்பீட்டிலும், கிராமங்களில் சிறு குளங்கள் 4 இடங்களில் ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டிலும், வாய்க்கால்கள் துார்வாரும் பணி 132 இடங்களில் ரூ.39.42 இலட்சம் மதிப்பீட்டிலும், மண் அரிப்பை தடுக்கும் வகையிலான தடுப்பணைகள் 50 இடங்களில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டிலும், மழைநீர் செறிவூட்டல் 270 இடங்களில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டிலும், கிணறு துார்வாருதல் ஒரு இடத்தில் ரூ.25,000 மதிப்பீட்டிலும், நீர்உறிஞ்சு குழிகள் 113 இடங்களில் ரூ.69.20 இலட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக்கலை பயிர் மற்றும் பழத்தோட்டம் அமைத்தல் பணிகள் 587 இடங்களில் ரூ.1.45 கோடி மதிப்பீட்டிலும், வேளாண் காடுகள் உருவாக்கம் 191 இடங்களில் ரூ.32.85 இலட்சம் மதிப்பீட்டிலும், கால்நடை தீவன சாகுபடி86 இடங்களில் ரூ.8.60 இலட்சம் மதிப்பீட்டிலும், பயிர் செயல்விளக்கம் 85 இடங்களில் ரூ.5.92 இலட்சம் மதிப்பீட்டிலும், விசைத்தெளிப்பான்கள் 98 விவசாயிகளுக்கு ரூ.7.70 இலட்சம் மதிப்பீட்டிலும், பேட்டரி தெளிப்பான்கள் 755 விவசாயிகளுக்கு ரூ.37.71 இலட்சம் மதிப்பீட்டிலும், தார்பாலின் 2,326 விவசாயிகளுக்கு 1.86 கோடி மதிப்பீட்டிலும், கால்நடை தீவனப்புல் வெட்டும் கருவி 529 விவசாயிகளுக்கு ரூ.1.63 கோடி மதிப்பீட்டிலும், களைப்புல் வெட்டும் கருவி 22 விவசாயிகளுக்கு ரூ.7.74 இலட்சம் மதிப்பீட்டிலும், இயற்கை உரங்கள் 350 விவசாயிகளுக்கு ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டிலும், வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளாக தையல் பயிற்சி, ஆயத்த ஆடைகள் தயாரித்தல், பால் உற்பத்தி, பெட்டிக்கடை, ஆடு வளர்ப்பு, தையல் இயந்திரம், தேய்ப்புப்பெட்டி, தோசைமாவு அரவை இயந்திரம் அமைத்து சுயதொழில் ஊக்குவித்தல், சுழல் நிதி என 1,480 பயனாளிகளுக்கு ரூ.2.09 கோடி மதிப்பீட்டிலான உதவி உபகரணங்கள் என ஆக மொத்தம் ரூ.31.37 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதன் மூலம் 7,683 விவசாயிகள் நேரடியாக பயனடைந்துள்ளனர், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
ஆய்வின்போது, வடமதுரை வட்டாரம், நல்லமனார்கோட்டை நீர்வடிப்பகுதியில் விவசாயிகள் திரு.சுந்தரராஜ் என்பவருக்கு ரூ.5,000 மதிப்பிலான பேட்டரி தெளிப்பான், திரு.குமரேசன் என்பவருக்கு ரூ.33,600 மதிப்பிலான கால்நடைதீவனப்புல் வெட்டும் கருவி, திருமதி சண்முகவல்லி, திரு.கணேசன் ஆகியோருக்கு தலா ரூ.8,000 மதிப்பிலான தார்பாலின்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
ஆய்வின்போது, மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் வேளாண்மை துணை இயக்குநர் (நுபா/நீமே) திருமதி ரெ.உமா, உதவிப்பொறியாளர் (வே.பொ.) திரு. மா.சகாயராஜ், நீர்வடிப்பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர்கள் திரு.செந்தில்வேல், திரு.சௌந்திரராஜன், திரு.ராஜகுரு, திரு.ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.