Close

Agri Grievance Day Petition

Publish Date : 22/03/2025
.

செ.வெ.எண்: 56/2025

நாள்: 21.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(21.03.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் மனுக்கள் அளித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இன்றைய கூட்டத்தில் 71 மனுக்கள் பெறப்பட்டன.

மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்ட ஒரு சதவீத செஸ் வரி ரத்து செய்யப்பட்டதற்காக தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 15.70 மி.மீட்டர், மார்ச் மாதத்தில் பெய்த மழையளவு(17.03.2025 வரை) 29.73 மி.மீட்டர், மார்ச்-2025 மாதம் வரை பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 60.40 மி.மீட்டர், 2025-ஆம் ஆண்டு மார்ச்(17.03.2025) மாதம் வரை பெய்த மழையளவு 65.85 மி.மீட்டர், மார்ச் மாதம் (01.01.2025 முதல் 17.03.2025 வரை) இயல்பான மழையளவைக் காட்டிலும் 5.45 மி.மீட்டர் கூடுதல் ஆகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டில் விளைபொருட்கள் உற்பத்தியானது இலக்கை விட கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நெல் உற்பத்தி இலக்கு 42,665 மெ.டன், உற்பத்தி செய்யப்பட்ட அளவு 46,550 மெ.டன், சிறுதானியங்கள் உற்பத்தி இலக்கு 2,83,710 மெ.டன், உற்பத்தி செய்யப்பட்ட அளவு 2,25,613 மெ.டன், பயறு வகை உற்பத்தி இலக்கு 19,879 மெ.டன், உற்பத்தி செய்யப்பட்ட அளவு 8,662 மெ.டன் ஆகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 01.04.2024 முதல் 17.03.2025 வரை யூரியா உரம் விநியோகம் 34,370 மெ.டன், இருப்பு 6,406 மெ.டன், டிஏபி விநியோகம் 8,584 மெ.டன், இருப்பு 1,260 மெ.டன், பொட்டாஷ் விநியோகம் 5,192 மெ.டன், இருப்பு 3,306 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் விநியோகம் 6,324 மெ.டன், இருப்பு 890 மெ.டன், காம்ப்ளக்ஸ் விநியோகம் 58,624 மெ.டன், இருப்பு 6,2.62 மெ.டன், அம்மோனியம் சல்பேட் மற்றும் அம்மோனியம் குளோரைடு விநியோகம் 525 மெ.டன், இருப்பு 305 மெ.டன், கலப்பு உரங்கள் விநியோகம் 4,374 மெ.டன், இருப்பு 3,125 மெ.டன் என மொத்தம் 1,18,493 மெ.டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 21,554 மெ.டன் உரம் இருப்பு உள்ளன. அதேபோல், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன.

நாய் கடித்து ஆடு, மாடு, கோழி போன்ற வளர்ப்பு பிராணிகள் உயிரிழப்பு ஏற்பட்டால் உரிய நிவாரணம் பெற, சம்பந்தப்பட்ட விவசாயிகள் கால்நடை மருந்தகங்களை அணுகி பயன்பெறலாம். கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 109 மனுக்களில் 98 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன.

தமிழக அரசின் திட்டங்களை விவசாயிகள் அறிந்து, நல்ல முறையில் பயன்படுத்தி, வேளாண் தொழிலை மேம்படுத்தி, விவசாய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்து, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், முதல்வர் மருந்தகங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

தேனி வேளாண்மைக் கல்லுாரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவிகள் பெரியகுளம், ஆத்துார் பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசின் திட்டங்கள் குறித்தும், விவசாய பெருமக்களின் கோரிக்கைகளை அறிந்து கொண்டு, விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், கொடைக்கானல் வன பாதுகாப்பு அலுவலர் திரு.யோகேஸ்குமார் மீனா, இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.அ.பாண்டியன், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) திரு.எம்.எஸ்.ராஜா, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி காயத்ரி, துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) திருமதி ரெ.உமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திருமதி கி.லீலாவதி உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.