Agri Grievance Day Petition
செ.வெ.எண்:52/2024
நாள்: 19.07.2024
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(19.07.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள், விவசாய பணிக்கு சீரான மின்சாரம் வழங்கிட வேண்டும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மின் இணைப்பு கோரி பெறப்படும் விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கிட வேண்டும். நாற்றுக்கள் வனத்துறையின் சார்பில் வழங்குவதனை உறுதிப்படுத்திட வேண்டும். ஆக்கிரமிப்பு குறித்து வழங்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும். நீர் வழி ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும், நீர்நிலைகளில் வண்டல் மண் அள்ள அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு விரைந்து அனுமதி வழங்கிட வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தேவையான அளவு உரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு, கூட்டுறவு துறை திட்டங்கள், கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் வணிகம் தொடர்பாக பல்வேறு திட்டங்கள் குறித்து அலுவலர்கள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில், ஜூலை 2024 மாதத்தில் பெய்த மழையளவு 6.11 மி.மீட்டர், ஜூலை மாதம் முடிய பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 262.70 மி.மீட்டர், இதில் 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதுவரை(18.07.2024) பெய்த மழையளவு 284.11 மி.மீட்டர், இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 21.41 மி.மீட்டர் கூடுதல் ஆகும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 01.04.2024 முதல் 16.07.2024 வரை யூரியா உரம் விநியோகம் 7246.131 மெ.டன், இருப்பு 6936.131 மெ.டன், டிஏபி விநியோகம் 1855.175 மெ.டன், இருப்பு 1487.800 மெ.டன், பொட்டாஷ் விநியோகம் 1259.770 மெ.டன், இருப்பு 1369.450 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் விநியோகம் 1597.400 மெ.டன், இருப்பு 540.150 மெ.டன், காம்ப்ளக்ஸ் விநியோகம் 7748.450 மெ.டன், இருப்பு 5874.630 மெ.டன், அம்மோனியம் சல்பேட் மற்றும் அம்மோனியம் குளோரைடு விநியோகம் 286.700 மெ.டன், இருப்பு 360.150 மெ.டன், கலப்பு உரங்கள் விநியோகம் 1470.500 மெ.டன், இருப்பு 3700.000 மெ.டன் என மொத்தம் 21,464.126 மெ.டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 20,268.342 மெ.டன் உரம் இருப்பு உள்ளன. அதேபோல் தேவையான அளவு இடுபொருட்கள் இருப்பு உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2024-25 ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்கள் மற்றும் பிர்க்காக்களில் காரீப் பருவத்திற்கு வாழை, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம். மேலும் வாழை பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய 16.09.2024-ஆம் தேதியும் மற்றும் வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி பயிருக்கு 31.08.2024-ஆம் தேதியும் கடைசி நாள் ஆகும். எனவே விவசாயிகள் விண்ணப்பத்துடன் பயிர் சாகுபடி செய்ததற்கான அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள பொது சேவை மையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு பதிவு செய்து பயன்பெறலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி அனுசுயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(வேளாண்மை) திரு.ராமராஜ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி காயத்ரி, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு) திரு.குமணன் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.