Close

Agri Meeting – MI Tank

Publish Date : 20/11/2024
.

செ.வெ.எண்:-44/2024

நாள்:-20.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்டத்தில் சிறு பாசன குளங்கள் புனரமைத்தல் தொடர்பாக மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுபாசன குளங்கள் (MI Tank) புனரமைத்தல் தொடர்பாக மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் சூழ்நிலையில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும், விவசாயத்திற்காக பாசன நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும், மழைக் காலங்களில் பெய்யும் மழைநீரினை முழுமையாக சேமிக்கவும், தமிழ்நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் உள்ள 5,000 சிறு பாசன குளங்களை புனரமைக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1056 சிறு பாசன குளங்கள் உள்ளன. அதில் 2024-25-ல் அரசு நிதியின் கீழ் 252 சிறு பாசன குளங்கள் புனரமைக்கப்பட உள்ளன. எஞ்சியுள்ள சிறுபாசன குளங்களில் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் பிற திட்டங்கள் மூலம் 479 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டன. இவை தவிர இதர குளங்கள் பெருநிறுவனங்களின்(CSR) நிதியிலிருந்து 20 சிறுபாசன குளங்களில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. நமக்குநாமே திட்டத்தின் கீழ் 10 சிறு பாசன குளங்களை புனரமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எஞ்சியுள்ள சிறு பாசன குளங்களை பெருநிறுவனங்களின் (CSR) நிதி, கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சமுதாய பொறுப்பு நிறுவனங்கள் மூலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாய அமைப்புகள், ஆயக்கட்டுதாரர்கள், பயனர் அமைப்புகள் சிறுபாசன குளங்களை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்.

சிறு பாசன குளங்களை சீரமைக்க “நமக்குநாமே திட்டம்“ மூலம் மதிப்பீட்டுதொகையில் 50 சதவீதம் பங்குத்தொகை செலுத்தி பணிகள் மேற்கொள்ளலாம்.

மேலும், அரசு நிதியின் மூலம் புனரமைக்கப்படும் சிறு பாசன குளத்திற்கு பொதுமக்கள், ஆயக்கட்டுதாரர்கள், பயனர் குழுவினர் மதிப்பீட்டு தொகையில் 10 சதவீதம் பங்குத் தொகையாக செலுத்தி தங்களது பங்களிப்பை உறுதி செய்யப்பட வேண்டும்.

மேற்கண்டவாறு, சிறு பாசன குளங்கள் புனரமைக்கப்படும் போது பாசன குளத்திற்கு தண்ணீர் வரும் கட்டமைப்பு, குளத்தில் உள்ள மதகுகள், உபரிநீர் வெளியேறும் கட்டமைப்புகளை மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மறு சீரமைப்பு செய்துகொள்ளலாம். மேலும் கட்டமைப்புகளை பராமரிப்பு செய்திட ஊராட்சி ஒன்றிய பொதுநிதி மற்றும் இதர நிதிகளின் மூலம் சீரமைத்துக் கொள்ளலாம்.

அனைத்து நிறுவனங்கள் மற்றும் ஆயக்கட்டுதாரர்கள், பயனர் குழு சிறு பாசன குளங்களை புனரமைப்பு செய்திட தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்கி திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலவதி, உதவித் திட்ட அலுவலர் திரு.கே.முத்துப்பாண்டி, வட்டாட்சியர்கள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.