AGRICULTURE DEPARTMENT (STARTUP)
செ.வெ.எண்:-37/2025
நாள்:-15.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிகை செய்தி
வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் கால்நடை துறை போன்றவற்றில் ஸ்டார்ட் அப் தொழில் துவங்க முன்வருவோருக்கு மானியம் அளிப்பதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை வணிகம், மற்றும் கால்நடைத்துறை போன்றவற்றில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு புதுமையான தீர்வுகளுடன் ஆரம்பிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் மதிப்புக் கூட்டுதல், வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் சேமிப்பு காலத்தினை அதிகப்படுத்துதல், புதுமையான வேளாண் இயந்திரங்களை உருவாக்குதல், ஏனைய ஸ்டார்ட் அப் தொழில் தொடங்குவதற்கு இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். நேரடியாக உண்ணும் தின்பண்டங்களுக்கு (Ready To Eat) இத்திட்டம் பொருந்தாது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்க இயக்கம் நிறுவனம் அல்லது ஸ்டார்ட் அப் இந்தியாவின் கீழ் பதிவு செய்திருத்தல் அவசியம். மேலும், அந்நிறுவனம் கம்பெனி சட்டம் 2013 அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மையின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். கூடுதலாக கடந்த மூன்றாண்டுகளில் சராசரியான இலாபம் 5 இலட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் புதிதாக தொழில் துவங்க ஒரு அலகிற்கு ரூ.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே தொடங்கப்பட்ட தொழிலை விரிவுப்படுத்தி சந்தைப்படுத்த ஒரு அலகிற்கு ரூ. 25 இலட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.