Animal Husbandry Dept – 40 Aseel Birds to women
செ.வெ.எண்:-08/2024
நாள்:-04.08.2024
திண்டுக்கல் மாவட்டம்
ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டில் ”ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38,700 பெண்களுக்கு 40 எண்ணிக்கையிலான நாட்டின கோழிக்குஞ்சுகளை 50 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தலா 100 பயனாளிகள் வீதம் மொத்தம் 1400 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், ஏழைப்பெண்ணாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். வசிக்கும் கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். பயனாளி சொந்த செலவில் (ரூ.3200) கொள்முதல் செய்திட திறன் பெற்றவராக இருக்க வேண்டும். சுயசான்று வழங்கிய ரசீது சமர்ப்பிக்கப்பட்டவுடன் 50 சதவீதம் மானியம் பயனாளியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுயஉதவிகுழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முந்தைய ஆண்டுகளில் இலவச கறவை மாடு, ஆடு/செம்மறியாடு திட்டம் அல்லது கோழிப்பண்ணை திட்டங்களில் பயனடைந்திருக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்படும் மொத்த பயனாளிகளில் 30 சதவீதம் நபர்கள் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இத்திட்டத்தில் பயனடைய விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி உரிய ஆவணங்களுடன் 10.08.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.