Close

Arts and Culture competition

Publish Date : 21/10/2024

செ.வெ.எண்:-40/2024

நாள்:-16.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் 20.10.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு, கலைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிறார்களிடையே மறைந்து கிடக்கும் கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளிலும், 5-8, 9-12, 13-16 வயதுப் பிரிவுகளில் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவித்து வருகிறது. 9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற சிறார்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தி, பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

அவ்வகையில், முதற்கட்டமாக 5-8, 9-12, 13-16 என்ற மூன்று வகையான வயது பிரிவில் திண்டுக்கல் மாவட்ட அளவிலான குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைப் போட்டிகள் 20.10.2024 அன்று நடைபெறவுள்ளது. கலைப் போட்டிகள் அனைத்திற்கும் திண்டுக்கல் பழனி சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.00 மணி முதல் முன்பதிவு நடைபெறவுள்ளது.

போட்டிகளில் கலந்து கொள்ளும், மாணவ, மாணவிகளின் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களுடன் (Birth Certificate) வயது சான்றிதழ் கொண்டு வரவேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

இப்போட்டிக்கான விதிமுறைகள்

1. பரதநாட்டியம் (செவ்வியல்)

பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும், திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. குறுந்தகடுகள் / பென்டிரைவ் ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

2. கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை)

தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றம் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும் திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. குறுந்தகடுகள் / பென்டிரைவ் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

3. குரலிசை

கர்நாடக இசை பாடல்கள், தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள், பிற மொழி பாடல்கள், குழுப்பாடல்களுக்கு அனுமதியில்லை. குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை பாட அனுமதிக்கப்படும்.

4. ஓவியம்

40க்கு30 செ.மீ அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், ஆயில் கலர் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைககள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்

5. வயது விவரம் (01.06.2024 அன்று உள்ளபடி 16 வயது)

அ. 5 முதல் 8 வயது பிரிவு – (01.06.2016 முதல் 31.05.2019 வரை பிறந்தவர்கள்)

ஆ. 9 முதல் 12 வயது பிரிவு – (01.06.2012 முதல் 30.05.2015 வரை பிறந்தவர்கள்)

இ. 13 முதல் 16 வயது பிரிவு – (01.06.2008 முதல் 30.05.2011 வரை பிறந்தவர்கள்)

மேலும், விவரங்களுக்கு 0452-2566420, 9790070867 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.