Bankers Meeting
செ.வெ.எண்:-51/2024
நாள்: 19.09.2024
திண்டுக்கல் மாவட்டம்
வங்கியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் வங்கியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று(19.09.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோர்கள் கிராமப்புறங்களில் அதிகளவில் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்தும் வகையில், வங்கிகள் சார்பில் கடனுதவிகள் வழங்கிட வேண்டும். சிறு, குறு தொழில் முனைவோர், தனியார் நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில், தொழில் மேம்பாட்டுக்கு தேவையான கூடுதல் நிதி ஆதாரங்களை வங்கிகள் சார்பில் வழங்கி, தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகமானோர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் அதிகளிவில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு காலதாமதமின்றி விரைந்து கடனுதவிகளை வழங்கிட வேண்டும்.
மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வங்கி சேவையை விரிவுபடுத்திடும் வகையில், வங்கி விதிகளில் விலக்கு அளித்து மலைக்கிராமங்களில் வங்கி கிளைகள் திறந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயக்கடன், கல்விக்கடன் உள்ளிட்ட சேவைகளில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கடன் இலக்கை எட்டும் வகையில் விரைந்து கடனுதவிகள் வழங்கிட வேண்டும்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தங்கள் விருப்பப்படி வீடுகள் கட்டிக்கொள்வதற்கு கூடுதல் நிதி தேவைப்படுவோருக்கு கடனுதவிகளை வங்கிகள் விரைந்து வழங்கிட வேண்டும்.
மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) மூலம் பரிந்துரை செய்யப்படும் தொழில் கடனுதவி விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து, தொழில் கடனுதவிகளை வழங்கிட வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2024-25-ஆம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட வருடாந்திர கடன் இலக்கில் முன்னுரிமை கடன் ரூ.18,971.84 கோடியில் ரூ.4,923.74 கோடியும், வேளாண்மை கடன் இலக்கு ரூ.15,466.78 கோடியில் ரூ.3,538.40 கோடியும், சிறு, குறு தொழில் மேம்பாட்டுக் கடன் இலக்கு ரூ.3,137.90 கோடியில் ரூ.1,336.93 கோடியும், பயிர்க்கடன் இலக்கு ரூ.10,689.84 கோடியில் ரூ.2,358.00 கோடியும், விவசாய பருவகால கடன் இலக்கு ரூ.3,007.76 கோடியில் ரூ.862.87 கோடியும், குறு நிறுவனங்களுக்கான கடன் இலக்கு ரூ.1,890.70 கோடியில் ரூ.629.25 கோடியும், கல்விக்கடன் இலக்கு ரூ.31.81 கோடியில் ரூ.7.16 கோடியும், வீட்டுக்கடன் இலக்கு ரூ.154.66 கோடியில் ரூ.22.11 கோடியும் என்ற வகையில் 30.06.2024 வரை கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடனுதவி கோரி பெறப்படும் விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து, எவ்வித காலதாமதமும் இன்றி கடனுதவிகள் வழங்கி திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சதீஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ஜி.அருணாச்சலம், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திரு.பூ.சு.கமலக்கண்ணன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) மாவட்ட மேலாளர் திரு.ஏ.ஆர்.முகைதீன் அப்துல்காதர், பல்வேறு வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.