Blood Donors Camp – GH
செ.வெ.எண்:-14/2025
நாள்:-03.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இரத்த தான முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(03.07.2025) நடைபெற்றது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் தொழுநோயாளிகள் உள் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, முழு உடல் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்துகொண்டார். பின்னர் இரத்த தான முகாமை தொடங்கி வைத்து இரத்த தானம் செய்தார். முகாமில் இரத்தானம் செய்த 56 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் இரத்த தான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் அங்குள்ள நுாலகத்தை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வத்துறை அமைச்சர் அவர்கள் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தற்போது, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே முழு உடல் பரிசோதனை மையம் சிறிய அளவில் செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த மையம் விரிவாக்கம் செய்யப்பட்டு தனி வார்டாக இன்று தொடங்கப்பட்டுள்ளது. ரூ.250 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் இரத்த பரிசோதனைகள், இசிஜி, சிடி ஸ்கேன் உட்பட 25 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் உடலில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அது முன்னதாகவே கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை எடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தொழுநோயாளிகள் பிரிவு தனி வார்டாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்குவதுடன், அவர்களுக்குத் தேவையான போர்வை, கண் கண்ணாடி, ஊன்றுகோல் மற்றும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட செருப்புகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இரத்த தானம் செய்யலாம். அந்த வகையில் இரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைவரும் இரத்ததானம் செய்ய வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மரு.இரா.சுகந்தி இராஜகுமாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.