Book fair -Awareness
செ.வெ.எண்:-13/2025
நாள்:-04.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 12வது புத்தக திருவிழா தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்லில் நடைபெற உள்ள 12வது புத்தக திருவிழா தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் இ.ஆ.ப. ,அவர்கள் திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று(04.08.2025) தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக் களம் ஆகியவை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 12வது புத்தகத் திருவிழா(2025) திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 28.08.2025 அன்று தொடங்கி 07.09.2025 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புத்தகத் திருவிழா இடநெருக்கடி இன்றி, வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், அனைவரும் எவ்வித சிரமமுமின்றி வந்து செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புத்தகத் திருவிழா குறித்து பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் அனைவரும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்கச் செய்யவும், மாணவ, மாணவிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதிகள் ஏற்படுத்திடவும், அனைத்துப் பள்ளிகளிலும் புத்தகத் திருவிழா தொடர்பாக கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளை புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கச் செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் சிறுதானிய கடைகள் அமைக்கவும் ஏற்பாடுள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், புத்தகத் திருவிழா திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறுவதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும், புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் புத்தகத் திருவிழா தொடர்பான இலச்சினை 01.08.2025 அன்று வெளியிடப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக, வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள், துண்டு பிரசுரங்கள், ஆட்டோக்களில் விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், இன்று வெளியிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், மாணவ, மாணவிகளிடையே புத்தகம் வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சிறுகச்சிறுக பணம் சேமித்து அவர்களே புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு சுமார் 32,000 உண்டியல்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்களுக்கு சேமிப்பு உண்டியல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், திண்டுக்கல் இலக்கிய களம் தலைவர் முனைவர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.