Close

Book fair Prearrangement

Publish Date : 01/08/2025
.

செ.வெ.எண்:-104/2025

நாள்:-31.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில், 12வது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 12வது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக் களம் ஆகியவை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 12வது புத்தகத் திருவிழா(2025) திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 28.08.2025 அன்று தொடங்கி 07.09.2025 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புத்தகத் திருவிழா இடநெருக்கடி இன்றி, வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், அனைவரும் எவ்வித சிரமமுமின்றி வந்து செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புத்தகத் திருவிழா தொடர்பான விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் 09.06.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டு பிரச்சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாணவ, மாணவிகளிடையே புத்தக வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சிறுகச்சிறுக பணம் சேமித்து அவர்களே புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு சுமார் 32,000 உண்டியல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேமிப்பு பணத்திலிருந்து புத்தகம் வாங்கும் மாணவ, மாணவிகளுக்கு சலுகை விலையில் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளது. புத்தகத் திருவிழா தொடர்பான இலச்சினை 01.08.2025 அன்று வெளியிடப்படவுள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும் புத்தகத் திருவிழா தொடர்பாக கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளை புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கச் செய்வதுடன், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புத்தகத் திருவிழா குறித்து பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் அனைவரும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்கச் செய்யவும், மாணவ, மாணவிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதிகள் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. புத்தகத் திருவிழா அரங்கில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் சிறுதானிய கடைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

புத்தகக் கண்காட்சியை காண வரும் பார்வையாளர்கள் பயன்படுத்த ஏதுவாக தற்காலிக குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், மருத்துவம் மற்றும் உணவு வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்பு, அவசர ஊர்தி வாகனங்கள் தயார் நிலையில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தக கண்காட்சி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் அனைவரும் புத்தக கண்காட்சிக்கு அழைத்து வரவும், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளின் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்து வசதிகள் செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது. 11 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என வட்ட மற்றும் வட்டார அளவில் தேர்ந்தெடுத்து நாள்தோறும் 4 பள்ளிகள் வீதம் கலை நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினந்தோறும் 10 ஆசிரியர்கள் வீதம் மாணவர்களுக்கு வழிகாட்ட நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் புத்தக கண்காட்சியை காண வருவதற்கு ஏதுவாக எத்தனை பேருந்துகள் எந்தெந்த பகுதியில் தேவை என்ற விவரத்தினை முதன்மை கல்வி அலுவலரிடம் பெற்று, பேருந்து வசதி செய்து தரவம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் புத்தக கண்காடசி நடைபெறும் இடம் மற்றும் தேதியினை துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்தி பொதுமக்களிடம் புத்தகக்காட்சி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் பங்கேற்க செய்யவும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் புத்தகக்காட்சி தொடர்பாக விளம்பரம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தகக்காட்சி நடைபெறும் நாட்களில் சிறந்த நாட்டுபுற கலைஞர்கள் மூலம் கலை நிகழ்ச்சி நடத்தவும், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் சிறுதானிய கடைகள் நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய இராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு அம்சங்களும் இடம்பெற நடவடிக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.