Book Festival Marathan
செ.வெ.எண்:-92/2025
நாள்:-23.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு “வாருங்கள் ஓடுவோம், வாசிப்பை நோக்கி” விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு “வாருங்கள் ஓடுவோம், வாசிப்பை நோக்கி” என்ற குறிக்கோளுடன் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை டட்லி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(23.08.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக் களம் ஆகியவை இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை டட்லி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற புத்தகத்திருவிழா மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முதன்முறையாக அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் டட்லி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் “வாருங்கள் ஓடுவோம், வாசிப்பை நோக்கி” என்ற குறிக்கோளுடன் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டத்தில் சுமார் 1300க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி மாணவ / மாணவியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு கல்லூரி மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் சொல்வது போல மாணவர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியமானதாகும். மாணவர்களின் எதிர்காலத்தை மிகவும் வளமானதாகவும், மகிழ்ச்சிகரமாகவும் உருவாக்கக்கூடியது கல்வியாகும். அந்த கல்வியில் முக்கியமனது புத்தகங்கள் மற்றும் புத்தகத்தின் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்துவதற்கும், புத்தகங்களில் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்துவதற்கும் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை புத்தக திருவிழா கொண்டாட இருக்கின்றோம்.
மாணவர்களின் எதிர்காலத்தில் கல்வியும், ஒழுக்கமும் முக்கியமாதாகும். உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக புதுமைபெண், தமிழ்புதல்வன் உட்பட உயர்கல்வி மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதை பொருள் பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், இளைஞர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டும் போதையில்லா தமிழ்நாடு என்ற பெரிய முழக்கத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆரம்பித்து இருக்கிறார்கள். போதையில்லா தமிழ்நாடு என்ற இயக்கத்தை மிகவும் வெற்றிகரமானதாக செயல்படுத்துவதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் அவசியமானதாகும்.
மேலும், பெண்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் மிகவும் முக்கியமானவர்களாக திகழ்கின்றனர். தமிழ்நாட்டில் சங்ககாலம் தொட்டு பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் இருந்து கொண்டு வருகிறது. பெண்களின் பங்களிப்பு அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக பெண்களை பாதுகாப்போம், கற்போம், கற்பிப்போம் என்ற பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பெண்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக தமிழ்நாடு திகழ்கிறது.
வாருங்கள் ஓடுவோம், வாசிப்பை நோக்கி” என்ற குறிக்கோளுடன் இன்று ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் சுமார் 1300க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களை கொண்டு மிகவும் சிறப்பாக ஒருங்கிணைப்பட்டு நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும், பங்கேற்றவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த பாரட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எம் காலனி, எம்.வி.எம் கல்லூரி, அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது.
மேலும், போதைபொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும் சமூக நலத்துறையின் மூலம் பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.4000, மூன்றாம் பரிசு ரூ.3000, நான்காம் பரிசு ரூ.2000 மற்றும் ஐந்தாம் பரிசு ரூ.1000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன்,இ.ஆ.ப, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப, உதவி ஆணையாளர்(கலால்) திரு.செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.இரா.சிவா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அன்பழகன், மாவட்ட நூலக அலுவலர் திரு.சரவணன்,வட்டாட்சியர்கள் ஜெயபிரகாஷ், பாண்டியராஜன், கோட்ட கலால் அலுவலர் திருமதி மீனா தேவி, தனி வட்டாட்சியர் பறக்கும்படை திரு.சக்திவேல், திண்டுக்கல் இலக்கிய கள நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.