Chief Minister’s Houses Reconstruction Scheme – Notification
செ.வெ.எண்:-38/2025
நாள்:-12.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
“முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்” என்ற புதிய திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ..ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு அரசின் “முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்” என்ற புதிய திட்டத்தின் கீழ், 2000-2001-ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாட்கோ, பழங்குடியினருக்கான திட்டங்கள் போன்ற பல்வேறு அரசு திட்டங்களின் கீழ், ஊரக பகுதிகளில் கட்டப்பட்டு, முழுவதும் பழுதடைந்து தற்போது பழுதுபார்க்க முடியாத நிலையில் உள்ள ஓடுகள் மற்றும் சாய்தள கான்கிரீட் கூரை கொண்ட வீடுகளை 2025-26-ஆம் ஆண்டில் மறு கட்டுமானம் செய்ய தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் 2000-2001-ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாட்கோ, பழங்குடியினருக்கான திட்டங்கள் போன்ற பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட இத்தகைய வீடுகளின் பயனாளிகள் அல்லது அவ்வீட்டில் குடியிருக்கும் அவர்களது சட்டப்பூர்வ வாரிசுகள் தற்போது மிகவும் சிதலமடைந்து முழுவதும் பழுதடைந்த நிலையில் உள்ள ஓடுகள் மற்றும் சாய்தள கான்கீரீட் கூரை கொண்ட வீடுகள் மட்டுமே தகுதியுள்ள வீடுகளாக கண்டறியப்பட்டுள்ளன.
கிராம ஊராட்சி அளவிலான தேர்வுக்குழு மூலம் இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் பயனாளிகள் 210 சதுர அடிக்கு உட்பட்ட அளவில் தங்கள் வீடுகளை மறுகட்டமைப்பு செய்துகொள்ள ரூ.2,40,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு அரசால் நேரடியாக தொகை விடுவிக்கப்படும்.
ஆகவே, மேற்காணும் வீடுகளில் குடியிருப்போர் தங்களது நிலஉடமை ஆவணங்களான பட்டா அல்லது பத்திரம், ஆதார் அட்டை, பயன்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கு புத்தகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை, குடும்ப அட்டை, பயனாளியின் பாஸ்போட் அளவிலான புகைப்படம், அலைபேசி எண் மற்றும் தற்போது குடியிருக்கும் வீட்டின் பழுதின் நிலை தெரியும் வகையில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் எடுத்த வண்ணப் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் தங்கள் விண்ணப்பங்களை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அல்லது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) என்ற பெயரில் அஞ்சல் மூலமோ 25.04.2025 மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்திட வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.