Close

Coffee with collector

Publish Date : 08/10/2025
.

செ.வெ.எண்:-11/2025

நாள்:-06.10.2025

திண்டுக்கல் மாவட்டம்

‘Coffee with Collector’ – உயிர்ம விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 29.09.2025 வரை 14 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 300 மாணவ/மாணவியர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 25 பேர், மருத்துவர்கள்/செவிலியர்கள் 25 பேர் மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று (06.10.2025) உயிர்ம விவசாயிகளுடன் பதினைந்தாவது நிகழ்வாக ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உயிர்ம விவசாயம் செய்து சான்று பெற்றுள்ள 37 விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடி உயிர்ம விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கி வரும் சான்று மற்றும் ஊக்கத்தொகை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட உயிர்ம விவசாயிகள் தங்கள் அனுபவங்களை மாவட்ட ஆட்சியருடன் பகிர்ந்து கொண்டனர். உயிர்ம விவசாயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், நவதானிய/பலதானிய விதைப்பு, இயற்கை இடுபொருள் தயாரிப்பு, காய்கறிகள், பழமரங்கள், மலர் வகைகள், கிழங்குவகை பயிர்கள் உள்ளிட்ட உணவுக்காடுகளை உருவாக்குவதன் மூலம் விவசாயிகள் தற்சார்பு நிலை அடைதல், பாரம்பரிய ரக விதைகளுக்கான சேமிப்புக்கலன் அமைத்தல், உயிர்ம முறையில் தென்னை சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு விளைபொருள் விற்பனை முனையம் ஏற்படுத்தித் தருதல், கிராம வாரியாக சந்தைப்படுத்துதலுக்கான வழிவகைகள், சிறுதானியப் பயிர்கள் சாகுபடி செய்வதன் முக்கியத்துவம், அய்யம்பாளையம் பகுதியில் விளையக்கூடிய நெட்டை ரக தென்னை சாகுபடியை அதிகரித்தல், பாரம்பரிய காலாபாத் நெல் ரகத்தினை உற்பத்தி செய்தல், உயிர்ம விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான நிரந்தர கட்டடம் கட்டுதல், மலைப்பகுதிகளில் விளையும் பயிர்களான காபி, மிளகு, சௌசௌ உள்ளிட்டவற்றை சந்தைப்படுத்துவதற்கு வேளாண் வணிகத்துறை மூலமான முன்னெடுப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சார்ந்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனைகள் வழங்கினார்.

இந்தநிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., துணை ஆட்சியர் (பயிற்சி) திருமிகு.மு.ராஜேஸ்வரி சுவி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.அ.பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.நா.வெ.நாகேந்திரன், வேளாண்மை துணை இயக்குநர் (விற்பனை மற்றும் வணிகம்) திருமதி.ரெ.உமா, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி.பா.காயத்ரி, உயிர்மச்சான்று ஆய்வாளர் திரு.சி.சின்னண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.