Collector-DDAWO ALIMCO Camp
செ.வெ.எண்:-49/2025
நாள்:-12.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் நலன்களுக்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.
திண்டுக்கல் சபரி திருமண மஹாலில் இன்று(12.07.2025) திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசின் அதிகாரமளிப்பு துறையின் கீழ் செயல்படும் அலிம்கோ(ALIMCO) நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர் நலன்களுக்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.
இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, தொழில் கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழக அரசின் நலத்திட்டங்கள், சென்றடையும் வகையில், மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்கி, பொருளாதார ரீதியாக முன்னேற்றும் வகையில் மாவட்ட அளவில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கூட்டுறவு வங்கி மற்றும் அரசுடமை வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசின் அதிகாரமளிப்பு துறையின் கீழ் செயல்படும் அலிம்கோ(ALIMCO) நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க மதிப்பீட்டு முகாம் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு இன்று (12.07.2025) திண்டுக்கல் சபரி திருமண மஹாலில் நடைபெறுகிறது.
அலிம்கோ நிறுவனத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை(UDID), பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, வங்கிக் கடன் மானியம், உதவி உபகரணங்கள், வருவாய் துறை மூலமாக வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, ஊரக வளர்ச்சித் துறை மூலமாக வழங்கப்படும் மகாத்மாகாந்தி தேசிய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் முழு ஊதியத்துடன் கூடிய நூறு நாள் வேலைஅட்டை பதிவு, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் விலையில்லா வீடு வழங்கும் திட்டம், மருத்துவத் துறையின் மூலம் இலவச பேருந்து பயண அட்டை மற்றும் இரயில்வே பாஸ் பதிவு செய்தல், மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும் பாரத பிரமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மற்றும் மத்திய அரசின் வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) போன்ற திட்டங்களின் கீழ் கடன் வழங்குதல், தாட்கோ மூலமாக வங்கிக் கடன், கூட்டுறவு வங்கியின் மூலமாக வங்கிக் கடன் பெறுதல் (NHFDC), முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், அடையாள அட்டை பதிவு மேற்கொள்ளுதல், ஆதார் சேவை மற்றும் இ-சேவை ஆகிய நலத்திட்டங்கள் வழங்குவதற்காக இம்முகாம் நடைபெற்றது.
மேலும், இம்முகாமில் இ-சேவை மையம், ஆதார் மையம், காப்பீட்டு திட்டம், மாவட்ட தொழில் மையம், LEAD Bank, கூட்டுறவுத்துறை, வேலைவாய்ப்பு துறை, தாட்கோ, எலும்பு முறிவு மருத்துவர், பொது மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள், கண் மருத்துவர், மன நல மருத்துவர், பல் மருத்துவர், தோல் மருத்துவர், வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, அரசு போக்குவரத்து கழகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உட்பட பல்வேறு துறைகள் கலந்து கொண்டனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இம்முகாமில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.தங்கவேல், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திரு.பாண்டியராஜன், திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ராஜசேகர், திரு.அண்ணாத்துரை, அலிம்கோ குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

..

.