Collector Inspection – Guziliamparai Panchayat Union
செ.வெ.எண்:-31/2025
நாள்: 09.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், கூம்பூர், வடுகம்பட்டி மற்றும் ஆர்.கோம்பை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.09.2025) செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கூம்பூர் ஊராட்சி, நாகுலுப்பட்டி கிராமம், சின்னக்குளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நர்சரி கார்டன் மற்றும் அதே பகுதியில் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், வடுகம்பட்டி ஊராட்சி, கிழக்கு வடுகம்பட்டியில் அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். மேலும், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவினை பார்வையிட்டதுடன், குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மருந்துகள் குறித்தும் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வழங்கப்பட்டு வரும் மதிய உணவினை உண்டு உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து புளியம்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், நியாயவிலைக்கடையில் வழங்கப்படும் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
ஆர்.கோம்பை ஊராட்சி, கிழக்கு மெத்தப்பட்டியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை கேட்டறிந்து குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாலை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை செய்து தர துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து புங்கம்பாடி கிராமத்தில் நியாயவிலைக்கடையில் வழங்கப்படும் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது குஜிலியம்பாறை வட்டாட்சியர் திரு.ரவிக்குமார் குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அண்ணாதுரை, திருமதி கற்பகம், உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.