Close

Collector Inspection-Kodaikanal-Vellakevi

Publish Date : 22/04/2025
.

செ.வெ.எண்:-59/2025

நாள்:-20.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் வட்டம், வெள்ளக்கவி மலைக்கிராமத்தில் பொதுமக்களுக்கான அடிப்படைத் தேவைகளை உறுதி செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், வெள்ளக்கவி மலைக்கிராமத்தில் பொதுமக்களுக்கான அடிப்படைத் தேவைகளை உறுதி செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(20.04.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் வெள்ளக்கவி ஊராட்சி உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த மலைக்கிராமம் சாலை பகுதியிலிருந்து சுமார் 8 கி.மீட்டர் துாரத்தில் உள்ளது. இந்த கிராமத்திற்கு மலைப்பாதை வழியாக நடந்துதான் செல்ல வேண்டும். அங்குள்ள பொதுமக்கள் தங்கள் பகுதி விளைபொருட்களை தலைச்சுமையாகவோ அல்லது குதிரை மூலம் பொதிசுமையாகவோ 8 கி.மீட்டர் துாரம் கரடு முரடான மலைப்பாதை வழியாக கொண்டு வந்து, சாலை பகுதியை அடைந்து, பின்னர் அங்கிருந்து வாகனங்களில் நகர் பகுதிக்கு வாகனங்களில் கொண்டு செல்வது வழக்கம்.

இந்தக் கிராம மக்களுக்குத் தேவையான குடிநீர், மின்சார வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை முழுமையாக கிடைக்கச் செய்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(20.04.2025) நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சுமார் 8 கி.மீட்டர் தூரம் நடந்து வெள்ளக்கவி கிராமத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். வெள்ளக்கவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிராம மக்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். அப்போது, கிராம மக்கள், தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, சுகாதார வசதி, கழிவுநீர் வாய்க்கால், பொதுக்கழிப்பறை வசதி, இலவச பட்டா, வீடு வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், “பொதுமக்களுக்கு இலவச பட்டா வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட இடம் வனத்துறை பகுதியா, நத்தம் புறம்போக்கு இடமா என்பது குறித்து வருவாய்த்துறையினரின் ஆவணங்களை சரிபார்த்த பின்னர் பட்டா வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுக்கழிப்பறை கட்டுவதற்கு இடம் கண்டறியப்பட்ட பின்னர் கழிப்பறை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மருத்துவ வசதி செய்து கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, சாலை வசதி இல்லாததால் அவர்கள் சந்திக்கும் சிரமங்கள், குடிநீர் பற்றாக்குறை மற்றும் மின்சார வசதி, விவசாய நிலங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம், தொழில் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், அரசின் திட்டங்கள் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, அங்கன்வாடி மையங்கள், சாலை வசதிகள், குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன்படி, அரசின் திட்டங்களை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

கொடைக்கானலில் இருந்து 5 கி.மீட்டர் துாரத்தில் உள்ள வட்டக்கானல் வரை சாலை வசதி உள்ளது. அதன்பின்னர் வட்டக்கானலில் இருந்து வெள்ளக்கவி ஊராட்சி உள்ளது. இங்கு சுமார் 100 குடும்பங்கள் 400 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மாலைப்பாதை வழியாக 8 கி.மீட்டர் துாரம் நடந்துதான் செல்ல வேண்டும்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் ஆலோசனையின்பேரில், இந்த மலைக்கிராம பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெள்ளக்கவி கிராமத்திற்கு, இல்லம் தேடி ரேஷன் பொருள் திட்டத்தின் கீழ், 2 நாட்களுக்கு முன்னர் குடும்ப அட்டைதாரர்களுக்கான குடிமைப்பொருட்கள் சுமார் 8 கி.மீட்டர் துாரம் குதிரைகள் மூலம் சுமந்து இந்த கிராமத்திற்கே கொண்டு வந்து வழங்கப்பட்டது.

வெள்ளக்கவி ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்வது தொடர்பாக இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கிராமத்திற்கு சாலை வசதி என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. தற்போது சாலை மற்றும் உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு அனுமதியளித்ததையடுத்து ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் தொடர்பாகவும் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் இன்னொரு 8 கி.மீட்டர் துாரத்திற்கு சாலை வசதி அமைக்க வேண்டிய தேவை உள்ளது. அந்த பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள் வருவதால், வனத்துறை இடத்தில் சுமார் 12 ஹெக்டேர் இடத்தை பொது பயன்பாட்டிற்கு எடுப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல், சின்னுார், பெரியூர் மலைக்கிராம பகுதி மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக வனப்பகுதியை கருத்தில் கொண்டு, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அரசின் அனுமதி பெற்று அதன்பின்னர் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெள்ளக்கவி கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்வதுதான் இன்றைய ஆய்வின் நோக்கம். இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான நடவடிக்கைள் விரைந்து மேற்கொள்ளப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, கொடைக்கானல் வன அலுவலர் திரு.யோகேஸ்குமார் மீனா, இ.வ.ப., வருவாய்த்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.