Collector Inspection – Natham

செ.வெ.எண்:-44/2025
நாள்:-14.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நத்தம் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நத்தம் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(14.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நத்தம் ஊராட்சி ஒன்றியம், புன்னம்பட்டி ஊராட்சி, உலுப்பங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.57.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடத்தை பார்வையிட்டார். பின்னர் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், சுகாதார வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீரை குடித்து பார்த்து, சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.
பின்னர் வேலம்பட்டி ஊராட்சி, சேர்வீடு கிராமத்தில் ரூ.26.63 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மக்கும் குப்பைகளில் இருந்து நுண் உரம் தயாரிப்பு கூடத்தை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர் சமுத்திராப்பட்டி ஊராட்சியில் மயான பகுதியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, நத்தம் பேரூராட்சி பகுதியில் குப்பைக் கிடங்கு, மெய்யப்பம்பட்டியில் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன மயானகூடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.ராஜா, மாவட்ட ஊராட்சி செயலர் திரு.செ.ஜெயச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.குமாரவேல், திரு.மகுடபதி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் திரு.ஆர்.செல்வக்குமார், வட்டாட்சியர் திரு.பாண்டியராஜன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.