Close

Collector Inspection- Preceding officer Training

Publish Date : 15/04/2024
.

செ.வெ.எண்:- 22/2024

நாள்:-07.04.2024

திண்டுக்கல் மாவட்டம்

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறும் பழனி அக்சையா அகாடமி மெட்ரிகுலேசன் பள்ளி(சிபிஎஸ்இ), ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி ஆகிய பயிற்சி வகுப்பு மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(07.04.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுபடும் பல்வேறு அலுவலர்களுக்கு தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு 24.03.2024 அன்று நடத்தப்பட்டது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகளில் 127-பழனி சட்டமன்ற தொகுதிக்கு பழனி அக்சையா அகாடமி மெட்ரிகுலேசன் பள்ளியில்(சிபிஎஸ்இ) மையம் அமைக்கப்பட்டு, 323 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 1596 வாக்குச்சாவடி அலுவலர்களும், 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் மையம் அமைக்கப்பட்டு 282 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 1384 வாக்குச்சாவடி அலுவலர்களும், 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு சின்னாளபட்டி சேரன் மெட்ரிகுலேசன் பள்ளியில் மையம் அமைக்கப்பட்டு 320 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 1574 வாக்குச்சாவடி அலுவலர்களும், 130-நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு நிலக்கோட்டை எச்.என்.யு.பி.ஆர். மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மையம் அமைக்கப்பட்டு, 270 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 1345 வாக்குச்சாவடி அலுவலர்களும், 131-நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு நத்தம் துரைக்கமலம் அரசு மாடல் மேல்நிலைப்பள்ளியில் மையம் அமைக்கப்பட்டு 327 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 1598 வாக்குச்சாவடி அலுவலர்களும், 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் மையம் அமைக்கப்பட்டு 290 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 1466 வாக்குச்சாவடி அலுவலர்களும், 133-வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வேடசந்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மையம் அமைக்கப்பட்டு 309 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 1510 வாக்குச்சாவடி அலுவலர்களும், என ஆகமொத்தம் 2121 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய மொத்தம் 10,473 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேவையான அலுவலர்களைவிட 20 சதவீதம் கூடுதலாக அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, இருப்பு அலுவலர்களாக வைக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி மையத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், இருக்கை வசதிகள், வாகன நிறுத்துமிடம், பொதுசுகாதார வசதி, காற்றோட்ட வசதியுடன் கூடிய வகுப்பறை, மின்விசிறி, மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மருத்துவக் குழு மற்றும் அவசர கால ஊர்தி வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பயிற்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், வாக்குப்பதிவு நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள், அஞ்சல் வாக்குச்சீட்டு உட்பட அனைத்து விதமான படிவங்களை பூர்த்தி செய்வதற்கான பயிற்சிகள் என அனைத்து வகையான பயிற்சிகளும் மாதிரி வாக்குச்சாவடி அமைத்தும், பயிற்சி கையேடுகள் வழங்கி உரிய பயிற்சிகள் ஒலிஒளி அமைப்புடன் அளிக்கப்படுகின்றன. வாக்குச்சாவடி அலுவலர்கள் 40 அலுவலர்களுக்கு ஒரு அறை வீதம் பயிற்சி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கு அஞ்சல் ஓட்டு பதிவு செய்திட ஏற்பாடு செய்யப்பட்டியிருந்தது.

அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குரிய வாக்குச்சாவடியில் பணியாற்றக்கூடிய அலுவலர்களான வாக்குச்சாவடி அலுவலர், நிலை அலுவலர்-1, நிலை அலுவலர்-2, நிலை அலுவலர்-3, நிலை அலுவலர்-4 என ஒரு வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றக்கூடிய அலுவலர்களுக்கு கூட்டாக இணைந்து இன்று(07.04.2024) பயிற்சி வழங்கப்படுகிறது.

வாக்குபதிவின் போது அலுவலர்கள் அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் மாதிரி வாக்குபதிவினை நடத்தி அதனை அழித்திட வேண்டும். பணியின் போது பதட்டபடாமல், பயப்படாமல் வாக்கு பதிவினை நடத்திட வேண்டும். வாக்கு பதிவினை நல்ல முறையிலும், நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்திட வேண்டிய பொறுப்பு மற்றும் கடமை வாக்குபதிவு அலுவலர்களுக்கு உள்ளது. வாக்குபதிவு குறித்து வழங்கப்பட்டுள்ள கையேட்டினை நல்ல முறையில் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே தெரிந்ததுதான் என நினைக்காமல் தற்போது வழங்கபடுகின்ற பயிற்சியினை மீண்டும் நல்ல முறையில் கற்றுக்கொள்ள வேண்டும். வாக்கு பதிவின் போது மின்னனு வாக்குபதிவு இயந்திரத்தில் ஏதேனும் பழுதுகள்/சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரியப்படுத்தி, மின்னனு வாக்குபதிவு இயந்திரத்தின் பழுதை சரி செய்து கொள்ள வேண்டும். தற்போது எந்த சட்டமன்ற தொகுதியில் இணைந்து பணியாற்ற உள்ளார்களோ அந்த அலுவலர்களுக்கு குழுவாக இணைந்து பயிற்சி வழங்கப்படுகிறது. அடுத்தக்கட்ட பயிற்சியின் போது. எந்த வாக்குச்சாவடி மையம் நிர்ணயம் செய்து முன்றாவது கட்ட பயிற்சி வழங்கப்படும் இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு 18.04.2024 அன்று நடைபெறும், என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சரவணன், பழனி வட்டாட்சியர் திரு.சக்திவேலன், கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.கார்த்திகேயன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.பால்பாண்டி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சசிக்குமார் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.