Collector meeting-Education
செ.வெ.எண்:-32/2025
நாள்:-11.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
உயர்கல்வியில் மாணவ, மாணவிகளை 100 சதவீதம் சேர்க்கை செய்வது தொடர்பாக கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்திடும் பொருட்டு அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மருத்துவம், துணை மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(11.06.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

.
திண்டுக்கல் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஒவ்வொரு மாணவ, மாணவியும் அவர்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு உயர்கல்விப் படிப்பை தேர்வு செய்து படிப்பதை உறுதி செய்வதே மாவட்ட நிர்வாகத்தின் இலக்கு ஆகும். இதன் பொருட்டு, மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் நோக்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘உயர்வுக்குப்படி – உயர்கல்வி வழிகாட்டி குழு’ திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்டது. இக்குழு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ‘கட்டுப்பாட்டு அறை’யில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இக்குழு பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள், பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேர்க்கை பெறுவதை கூடுதல் கவனத்துடன் உறுதி செய்து வருகிறது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ‘கல்லூரிக் கனவு’ மற்றும் ‘உயர்வுக்குப்படி’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் உயர்கல்வியில் சேர்க்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மாவட்ட நிர்வாகத்தின் இந்த முன்னெடுப்பில் அனைத்து வகை கல்லூரிகளின் பங்களிப்பு முக்கியமானது. தற்போது கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் தங்கள் கல்லூரிகளில் எத்தனை இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்ற விபரத்தை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். சேர்க்கை பெறும் மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை, சலுகைகள் முழுமையாக கிடைப்பதனை உறுதி செய்ய வேண்டும். அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் போக, நிர்வாக ஒதுக்கீட்டில் தாமாக முன்வந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியருக்கு தேவையான கட்டண சலுகை உள்ளிட்ட உதவிகள் செய்வது வரவேற்கப்படுகிறது. இதன்பொருட்டு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ வலைதளப் பக்கத்தில்(https://nammaschool.tnschools.gov.in) பதிவு செய்து தனியார் கல்லூரிகள் தங்கள் உதவிகளை மேற்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் 6 மாணவர்கள் ஓசூர் டைட்டன் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணலில் (Campus Interview) கலந்து கொண்டு பணி வாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கான பணி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மு.கோட்டைக்குமார், கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள், துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.