Close

Collector Meeting – Health

Publish Date : 28/08/2024
.

செ.வெ.எண்:-61/2024

நாள்: 22.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (22.08.2024) ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து, தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். மருத்துவமனைகளில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள அனைத்து சிசிடிவிக்களும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். மருத்துவமனையின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் குறைந்தது ஒரு மாதம் சேமிப்புத்திறன் கொண்ட போதிய எண்ணிக்கையிலான சிசிடிவிக்களை நிறுவி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் வார்டுகள், வழித்தடங்கள், பணி அறைகள் மற்றும் அனைத்து முக்கியப் பகுதிகளிலும் சரியான முறையில் விளக்குகள் பொறுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் ஒப்பந்தப் பாதுகாப்பு பணியாளர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையின் மூலம் கண்காணிக்க வேண்டும். மேலும் அவர்கள் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அவ்வப்போது பயிற்சி பெற வேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள புறக்காவல் நிலையங்களில் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் பணியில் இருக்க வேண்டும். காவலர்கள் மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து ரோந்துப்பணி மேற்கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் அவசர உதவி தேவைப்படும்போது காவல் உதவி செயலி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். மேலும், அவசரகால உதவி எண்களை அனைவரும் அறிந்துகொள்ளும்படி அனைத்து மருத்துவமனைகளிலும் தகவல் பலகை வைக்க வேண்டும்.

மருத்துவர்கள் அறையில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திட வேண்டும். மருத்துவமனை சுற்றுச்சுவர், கதவுகள் உறுதித்தன்மை, சீரான மின் வினியோகம் ஆகியவற்றை உறுதி செய்திட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், இணை இயக்குநர்(மருத்துவ நலப் பணிகள்) மரு.பூமிநாதன், துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.வரதராஜன், அரசு மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் மரு.கீதாராணி, மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் மரு.புவனேஸ்வரி, உதவி ஆணையாளர்(கலால்) திரு.பால்பாண்டி, உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.ஆர்.ராஜா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஐ.நாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) பொறுப்பு திரு.செல்வன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.