Close

Collector Press Meet

Publish Date : 15/07/2025

செ.வெ.எண்:-47/2025

நாள்:-11.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(11.07.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் மேற்பார்வையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் ஜூலை 15-ஆம் தேதி துவங்கப்படுகிறது.

ஜூலை 15-ஆம் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் நடைபெறும். இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை வருகிற 15.07.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

அதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக 112 முகாம்கள் வருகிற 15.07.2025-ல் தொடங்கி 14.08.2025 வரை நடைபெறும். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த முகாம்கள் அடுத்தடுத்த மாதங்களில் நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

இரண்டாம் கட்டமாக 96 முகாம்கள் 15.08.2025 முதல் 14.09.2025 வரை நடைபெறும். மூன்றாம் கட்டமாக 89 முகாம்கள் 15.09.2025 முதல் 14.10.2025 வரை நடைபெறும் மற்றும் நான்காம் கட்டமாக 63 முகாம்கள் 15.10.2025 முதல் 14.11.2025 வரை நடைபெறும்.

தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும் , ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அந்த பகுதிகளில் மனுக்கள் பெறப்பட்டு, 45 நாட்களுக்குள் தீர்வு காண மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில் 360 முகாம்கள் நான்கு கட்டங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில நடத்தப்படவுள்ளன.

இத்திட்டத்தின்கீழ் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள்/ சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.

மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 4,00,433 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 1,42,500 விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளது. பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் அந்தந்த பகுதியில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடுவீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல்கையேடு வழங்கும் பணி, 07.07.2025-ம் தேதி அன்று முதல் தொடங்கப்பட்டது. இந்தப் பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இம்முகாம்களில் ஒவ்வொரு முகாமிற்கும் சுமார் 10 ஆயிரம் நபர்கள் பயனடையக்கூடிய அளவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி பகுதியில் 5 வார்டுகளுக்கு 2 முகாம்களும், மாநகராட்சி பகுதியில் 5 வார்டுகளுக்கு 2 முகாம்களும், பேரூராட்சி பகுதியில் 5 வார்டு பகுதிகளுக்கு 2 முகாம்களும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. மேலும், மலை கிராமங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து முகாம்களிலும் மாவட்ட காவல் துறையின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் ஊரக மற்றும் நகர்ப்புற அனைத்து பகுதிகளில் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் முகாமில் கலந்து கொண்டு தங்கள் மனுக்களை வழங்கி பயன்பெறலாம்.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நடைபெறவுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.