Close

CSR Conclave 2025

Publish Date : 07/04/2025
.

செ.வெ.எண்:- 16/2025

நாள்:05.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

சமூக பொறுப்பு நிதி சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் பார்சன் ஹோட்டலில் சமூக பொறுப்பு நிதி சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(05.04.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசு சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு நிதியிலிருந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சில பணிகள் பொதுமக்களின் பங்களிப்பபுடன் நமக்குநாமே திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்தும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சுகாதார கட்டமைப்பு, பள்ளி மற்றும் கல்லுாரி கல்வி கட்டமைப்பு, நமக்கு நாமே திட்டம், தாய்மை திட்டம், கல்லூரி கனவு, தொழிற்கல்வி, மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள், கற்கை நன்றே ஆகிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக, திண்டுக்கல் வணிகர் சங்கத்தினருடன் கைகோர்ப்போம் கட்டமைப்போம் என்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தின் சமூக மற்றும் கல்வியியல் உட்கட்டமைப்புகளை அடுத்தடுத்து முன்னெடுத்து செல்வதற்கான முதல் படியாக இன்று குத்துவிளக்கேற்றி இந்தத் திட்டம் வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், 1985-ல் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கோயம்புத்தூர், மதுரை போன்ற மற்ற மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை காட்டிலும் விவசாயம் மற்றும் தொழில் சார்ந்து எண்ணற்ற நிறுவனங்கள் இங்கு வந்து தாங்களும் வளர்ந்து, தங்களை சுற்றியுள்ள மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான கட்டமைப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.

அந்த வகையில் கடந்த 40 ஆண்டு காலத்தில் ஆன்மீகம், பொருளாதாரம், விவசாயம் நிறைந்த திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்று இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் பரப்பளவில் மிக பெரிய மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டம் உள்ளது. இங்குள்ள நிதிசார் நிறுவனங்கள், சமூகம் சார்ந்த நிறுவனங்கள், கல்வி சார் நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளன.

இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் நிதியுதவியும், பொருளாதாரமும் கிடையாது. இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உண்டான சமூக பொருளாதார கல்வியில் நீதிக்கான முதல் முன்னெடுப்புதான். இதற்கு முன் தங்கள் நிறுவனத்திலிருந்து நிறைவேற்றப்பட்ட குளங்கள், தடுப்பணை, கால்வாய், நகரம் மற்றும் கிராம வளரச்சி, கல்வி வளர்ச்சி, சுகாதாரம், சுற்றுச்சூழல், மாற்றுத்திறனாளிகள் ஆகிய கட்டமைப்புகளுக்கு இதுவரை ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

சுகாதார கட்டமைப்புகளில் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு முறையில் வைப்பதற்கு இன்குபேட்டர், வெப்பமாக்கும் இயந்திரங்கள், தாய் சேய்க்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பான முறையில் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க விழிப்புணவு மற்றும் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்று நோய், மார்பக புற்று நோய் ஆகிய நோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், அந்த நோய்களை குணப்படுத்த தேவையான மருந்துகளை வழங்குவதற்கு சமூக பொறுப்பு நிதியிலிருந்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கல்வி கட்டமைப்புகளில் அங்கன்வாடி மையம் கட்டடங்கள் கட்டுவதற்கும், குழந்தைகளுக்கு நவீன வகுப்பறைகள் ஏற்படுத்தலாம். குழந்தைகள் சிறந்த கல்வியை வழங்குவதற்கும், அரசு பொது தேர்வினை எதிர்கொள்வதற்கு தேவையான நூலகங்கள், புத்தகங்கள், பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்த தங்களின் பங்களிப்புடன் மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்வாகும் சுமார் 20,000 மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேருவதை உறுதி செய்யவும், குளங்கள் மற்றும் ஏரிகள் பெருமளவில் துார்வாரப்படுவதை உறுதி செய்யவும், திண்டுக்கல் மாவட்டத்தில் 50 இலட்சம் மரக்கன்றுகள் நடுதல், நான் முதல்வன் திட்டத்தில் திறன் வளர்ச்சி போன்ற அனைத்துத் திட்டங்களிலும் சமூகப் பங்களிப்பை அளிக்க அனைத்து நிறுவனங்களும் முன்வர வேண்டும், என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வர்த்தக சங்க தலைவர் திரு.ஜி.சுந்தரராஜன், நாகா மில்ஸ் லிட் தலைவர் திரு.கே.எஸ்.கமலக்கண்ணன், பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி தலைவர் திரு.ஆர்.எஸ்.கே.ரகுராமன், எஸ் எஸ் எம் மில்ஸ் தலைவர் திரு.பி.எஸ்.வேலுச்சாமி, சிவா டெக்ஸ் தலைவர் திரு.அழகப்பன், பண்ணாரி அம்மன் மில்ஸ் தலைவர் திரு.ஆறுமுகம், வணிக சங்கங்களின் பிரதிநிதிகள், லயன்ஸ், ரோட்டரி கிளப், பில்டர் அசோசியேசன், தானம் அறக்கட்டளை முக்கிய பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

. .

.