DDAB(Agriculture Business)
செ.வெ.எண்:-11/2025
நாள்:-02.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவதிலும் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் வலுவான உட்கட்டமைப்பு வசதிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை குறைப்பது, விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்து, விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவது ஆகிய நோக்கத்தை அடைவதற்காக வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் (Agriculture Infrastructure Fund) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.32 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.2 கோடி கடன் 7 ஆண்டுகள் வரை 3 சதவீதம் வட்டி மானியம் மற்றும் அரசின் கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் பயனாளியின் பங்களிப்பு 10 சதவீதமாகும். இதற்கு விவசாய தொழில் முனைவோர், அரவை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், சுயஉதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு, வர்த்தகர்கள், உணவு பதப்படுத்துவோர் மற்றும் மாநில சேமிப்பு கழகங்கள் விண்ணப்பிக்கலாம். மின்னணு வணிக மையம், சேமிப்பு கிடங்கு, சுத்தம் செய்தல், உலர்த்துதல் மற்றும் தரம் பிரித்தலுக்கு தேவையான இயந்திரங்கள், ட்ரோன் வாங்குதல், இயற்கை வேளாண் இடுபொருட்கள் தயாரிப்பு மையங்கள் தொடங்குதல், நெல் மற்றும் கரும்பு அறுவடை இயந்திரங்கள், குளிர்பதன கிடங்கு, சிப்பம் கட்டும் கூடங்கள், தரம்பிரிக்கும் இயந்திரங்கள், மெழுகு பூசும் மையங்கள், பண்ணைக் கழிவு மேலாண்மை சார்ந்த உட்கட்டமைப்பு, மண்புழு உரம் தயாரித்தல், சூரிய ஒளி மின் உற்பத்தி மையங்கள் ஆகியவற்றை அமைக்க கடன் பெறலாம்.
இதற்கு https://agriinfra.dac.gov.in என்ற இணையதள முகவரியில் விரிவான திட்ட அறிக்கைகளுடன் வங்கி கிளைகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, நபார்டு வங்கி, வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், வேளாண் பொறியியல்துறை அலுவலர்கள், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.