DDAB(Agriculture Business)-Moringa
செ.வெ.எண்:-19/2025
நாள்:-05.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
முருங்கை சாகுபடி செய்யும் விவசாயிகள் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் சேனன்கோட்டையில் அமைந்துள்ள முருங்கை முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை அணுகி பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், சேனன்கோட்டையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் அமைந்துள்ள முருங்கை இலை முதன்மை பதப்படுத்தும் நிலையம் செயல்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், தொப்பம்பட்டி, வடமதுரை, குஜிலியம்பாறை, வத்தலகுண்டு ஆகிய வட்டாரங்களில் 5,480 ஹெக்டேர் பரப்பில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இம்முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் முருங்கை இலை பதப்படுத்துவதற்கான இயந்திரங்கள் கூடிய உட்கட்டமைப்புகள், 17 மெ.டன் குளிர்பதன கிட்டங்கி, 1000 மெ.டன் சேகரிப்பு கிடங்கு, 60 மெ.டன் எடை மேடை ஆகியவை உள்ளன. இங்கு முருங்கை இலை பொடி, காய் பொடி, சூப் பொடி தயார் செய்தல், வேளாண் விளைபொருட்களை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டி விற்பனை செய்தல் போன்ற செயல்பாடுகள் நடைபெறுகின்றன. ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு மூலம் தனியருக்கு வாடகைக்கு விடப்பட்டு முருங்கை முதன்மை பதப்படுத்தும் நிலையம் செயல்பட்டு வருகிறது.
முருங்கையில் காய், இலை, பூ உட்பட அனைத்தும் இந்த மையத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது. பருவ காலங்களில் விளையும் முருங்கையை வெளி சந்தையில் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. இம்மையத்தில் பதப்படுத்தி, மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த முருங்கை விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. முருங்கை மட்டுமில்லாமல் காய்கறிகள் மற்றும் பழங்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்கின்றனர்.
எனவே, முருங்கை சாகுபடி செய்யும் விவசாயிகள் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் சேனன்கோட்டையில் அமைந்துள்ள முருங்கை முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை அணுகி பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) திருமதி ரெ.உமா அவர்களை 9442060637 என்ற எண்ணிலும், தோட்டக்கலை உதவி இயக்குநர் திருமதி சு.ஷைனி திவ்யா மேக்டலின் அவர்களை 9443592508 எண்ணிலும், முதன்மை பதப்படுத்தும் நிலைய ஒப்பந்ததாரர் திரு.தருகணன் அவர்களை 9894060869 எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.