DDAWO – SCHOLARSHIP
செ.வெ.எண்: 57/2025
நாள்: 16.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரியில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மாற்றத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், 1-ம் வகுப்பு முதல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 2025-2026-ஆம் நிதியாண்டுக்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மாணவ, மாணவியரின் வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதார் அட்டை நகல், UDID அட்டை நகல், தடையில்லா சான்று ஆகியவற்றுடனும், மேலும், 9ம் வகுப்பு முதல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் கூடுதலாக முந்தைய வகுப்பில் பெற்ற மதிப்பெண் சான்று (40 சதவீதத்திற்கும் குறையாமல் இருத்தல் வேண்டும்) ஆகியவற்றுடன் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தில் பள்ளி தலைமையாசிரியர் கையொப்பம், கல்லூரி முதல்வர் கையொப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
9-ம் வகுப்பு முதல் கல்லுாரிகளில் கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேசிய அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல் 1, குடும்ப அட்டை நகல், மாணவ, மாணவிகள் வங்கி கணக்குப் புத்தக நகல் 1, பிற துறைகளில் வகுப்பு வாரியான கல்வி உதவித்தொகைக்கு பள்ளி மற்றும் கல்லூரி வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறவில்லை என்பதற்கான பள்ளி மற்றும் கல்லூரி முதல்வரின் தடையில்லா சான்றுடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 22.07.2025-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்(0451-2460099) வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.