DDHS-Scrub Typhus
செ.வெ.எண்:-61/2024
நாள்:-23.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
பருவ மழை காலங்களில் டெங்கு, உண்ணி காய்ச்சல் போன்ற நோய்கள் பரவலை தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளாட்சி துறைகளுடன் இணைந்து உடனுக்குடன் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் முன்பாதுகாப்புடன் இருப்பதோடு, மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை மேற்கொண்டு, மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்நோய் பரவலை தடுக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
பருவ மழை காலங்களில் டெங்கு, உண்ணி காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகமாக பரவ வாய்ப்பு இருக்கிறது. இந்நோய் கால்நடைகள், எலி மற்றும் வளர்ப்பு பிராணிகள் உடலில் காணப்படும் ஒருவகை ஒட்டுண்ணி. மனிதனை கடிக்கும்போது பாக்டீரியா கிருமி மூலம் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த ஒட்டுண்ணி காடு, தோட்டம், வயல்வெளிகளில் இருக்கும் செடி மற்றும் மண்ணில் வளரக்கூடியது.
கால்நடைகள், எலிகள் உணவு தேவைக்காக மேற்கண்ட பகுதியில் செல்லும்போது உண்ணிக்காய்ச்சல் பரப்பும் இவ்வகை ஒட்டுண்ணிகள் உடலில் ஒட்டிக்கொள்ளும். மேலும், இவ்வகை ஒட்டுண்ணிகள் மனிதன் தொழில் ரீதியாக காடு, தோட்டம், வயல்வெளிகளில் செல்லும்போது இந்த ஒட்டுண்ணிகள் மனிதர்கள் மேல் ஒட்டிக்கொள்ளும். மனிதன் மேல் ஒட்டிக்கொண்ட ஒட்டுண்ணிகள் உணவுக்காக அவர்களை கடிக்கும்பொழுது உண்ணிக்காய்ச்சல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
உண்ணிக்காய்ச்சலை தடுக்கும் பொருட்டு மனிதர்கள் வசிக்கும் இடங்களில் உள்ள கால்நடை கொட்டில்கள், வீட்டு வளர்ப்பு பிராணிகளை சுகாதாரமாக வளர்ப்பது அவசியம். வசிப்பிட பகுதிகளில் எலி வலைகளை நிரந்தரமாக மூட வேண்டும். மேலும், தொழில் ரீதியாக வயல், தோட்டம், வனப்பகுதி, வனம் சார்ந்த பகுதிகளில் முன்பாதுகாப்புடன் இருப்பதோடு மட்டுமல்லாமல் மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று வந்தவுடன் குளிப்பதுடன், தங்கள் ஆடைகளை வீட்டிற்கு வெளியே துவைத்து வெயிலில் காய வைப்பதன் மூலம் உண்ணிகள் தங்களை கடிப்பதில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு பொதுசுகாதாரத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளாட்சி துறைகளுடன் இணைந்து உடனுக்குடன் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தங்களை பரிசோதனை செய்துகொண்டு, அவ்வாறு உண்ணிக்காய்ச்சல் ஏற்படும் சமயத்தில் மருத்துவமனைகளிலேயே இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், விவசாயப்பணிகள், கால்நடைகள் பராமரிப்பு பணி செய்பவர்கள் முன்தடுப்பு மாத்திரைகளை வாரம் ஒரு மாத்திரை என ஆறு வாரங்களுக்கு சாப்பிடுவதன் மூலம் இந்நோய் வருவதை தடுக்கலாம். இம்மாத்திரைகள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.