Close

DIC- Award – Notification

Publish Date : 13/05/2024

செ.வெ.எண்:-09/2024

நாள்:-08.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாநில மற்றும் மாவட்ட அளவிலான விருது பெற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, சிறந்த தொழில்முனைவோர் உட்பட ஆறு பிரிவுகளில், தமிழ்நாடு அரசு விருது வழங்க உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவில், 65,000 மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றின் வாயிலாக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

உள்நாடு மற்றும் உலக சந்தைகளில் போட்டி தன்மையுடன் இருக்க, ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான நடவடிக்கைகள் வாயிலாக முன்னேற்றம் கண்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை விருது வழங்குகிறது. அதன்படி, சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் உற்பத்தி மற்றும் சேவை தொழில் நிறுவனங்களின் தொழில் அதிபர்களுக்கு, மாநில மற்றும் மாவட்ட அளவிலான விருதுக்கு விண்ணப்பிக்க, அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த விருதுகள், ஆறு பிரிவுகளில் வழங்கப்பட உள்ளது. அதன்படி,

1. மாநில அளவிலான சிறந்த வேளாண் தொழில் முனைவோர் விருது.

2. மாநில அளவில் சிறந்த மகளிர் தொழில்முனைவோர் விருது.

3. சிறப்பாக செயல்படும் நலிந்த மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த தொழில்முனைவோர் விருது.

4. மாநில அளவில் சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதிக்கான விருது.

5. மாநில அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது.

6. மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோர் விருது.

தங்களது நிறுவனம் விருதுகள் பெற விண்ணப்பிப்பதற்கு, 2020-2021-ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு வரவு செலவு கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி, வருமான வரி அறிக்கை இருக்க வேண்டும். உதயம் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

விருது பெற விரும்பும் தொழில் நிறுவனங்கள், awards.fametn.com என்ற இணையதளத்தில் 20.05.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் தலைமையிலான உயர்மட்ட குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, விருது பெறும் நிறுவனங்களை தேர்வு செய்யும் என்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி விருதுகள் பெற்று முன்னோடி தொழில் அதிபர்களாக மாற வேண்டும்.

இது தொடர்பாக கூடுதல் விபரங்களுக்கு, “பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், எஸ்.ஆர் மில்ஸ் சாலை, சிட்கோ தொழில் பேட்டை, திண்டுக்கல்–624003“ என்ற முகவரியில் நேரடியாகவோ, dicdindigul@gmail.com என்ற இ-மெயில், 8925533943 என்ற கைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.