Close

DRUG free Awareness Rally

Publish Date : 02/07/2024
.

செ.வெ.எண்:-57/2024

நாள்:-26.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று(26.06.2024) நடைபெற்றது. பேரணியை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலால் மற்றும் மதுவிலக்கு உதவி ஆணையர் திரு.இரா.பால்பாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் கலந்துகொண்ட சாரணியர் மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் “மரணத்தை பரிசளிக்கும் போதை பொருள் வேண்டாம்”, “மது நாட்டுக்கும் உயிருக்கும் கேடு”, “போதை அது சாவின் பாதை”, “போதையில் நீ, வீதியில் உன் குடும்பம்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இந்த பேரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தபால் நிலையம் சாலை வழியாக, பேருந்து நிலையம் சாலை, பெரியார் சிலை, அண்ணா சிலை வழியாக மீண்டும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

முன்னதாக போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியினை மாவட்ட கலால் மற்றும் மது விலக்கு உதவி ஆணையர் திரு.இரா.பால்பாண்டி வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்படி, “போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கம் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு.சுந்தரபாண்டியன், போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமதி பெனாசீர்பாத்திமா, கோட்ட கலால் ஆய்வாளர் திரு.நவநீதகிருஷ்ணன், மதுவிலக்கு காவல்துறையினர், தேசிய மாணவர் படை மாணவர்கள், நாட்டுநலப் பணிகள் மாணவர்கள், பள்ளி, கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், சாரணியர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.