Close

Drugs Free Meeting

Publish Date : 12/10/2024
.

செ.வெ.எண்:-17/2024

நாள்:-07.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் 129 கடைகள் சீல் வைக்கப்பட்டன. 127 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை விற்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை ஒழிப்பு தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(07.10.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை ஆகியவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக நகராட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினசரி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை விற்பனை செய்யும் கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றிற்கு முதல் முறை அபராதம் ரூ.5000 விதிக்கப்படும். தொடர்ந்து விதிகளை மீறி செயல்பட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.400 வீதம் அபராதமும், சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 397 தணிக்கைகள் செய்யப்பட்டு, 8.00 கி.கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 72 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 2,844 கடைகள் தணிக்கை செய்யப்பட்டு, 576.89 கி.கிராம் கைப்பற்றப்பட்டு, 129 கடைகள் சீலிடப்பட்டன. இதுதொடர்பாக 55 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், உதவி ஆணையாளர்(கலால்) திரு.பால்பாண்டி, டாஸ்மாக் மாவட்ட பொது மேலாளர் திரு.ஆர்.ரவிச்சந்திரன், வருவாய் வட்டாட்சியர்கள் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.