Close

Drugs Free Meeting

Publish Date : 16/10/2024
.

செ.வெ.எண்:-34/2024

நாள்:-14.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் 07.10.2024 அன்று முதல் 13.10.2024 வரையிலான ஒரு வாரத்தில் 59 கடைகள் சீல் வைக்கப்பட்டன. 73 நபர்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.15.88 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை ஒழிப்பு தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(14.10.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை ஆகியவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 92 இடங்களில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் 4,431 நபர்கள் பங்கேற்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட காவல் துறை, காவல் துணைக்கண்காணிப்பாளர் (மது விலக்கு அமலாக்கப்பிரிவு), டாஸ்மாக் மாவட்ட மேலாளர், கோட்ட கலால் அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி அருகில் தணிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 07.10.2024 அன்று முதல் 13.10.2024 வரையிலான ஒரு வார காலத்தில் 134 தணிக்கைகள், பள்ளி, கல்லுாரி அருகே 67 தணிக்கைகள் நடத்தப்பட்டத்தில் 9.63 கி.கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 29 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 902 வாகனங்கள் மற்றும் 220 வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டதில் 59 நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டதில் 110.45 கி.கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 59 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டு, அபராத தொகையாக ரூ.15.88 இலட்சம் வசூலிக்கப்பட்டது. இதுதொடர்பாக 44 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை விற்பனை செய்யும் கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றிற்கு முதல் முறை அபராதம் ரூ.5000 விதிக்கப்படும். தொடர்ந்து விதிகளை மீறி செயல்பட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.400 வீதம் அபராதமும், சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தை போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., உதவி ஆணையாளர்(கலால்) திரு.பால்பாண்டி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஸ், டாஸ்மாக் மாவட்ட பொது மேலாளர் திரு.ஆர்.ரவிச்சந்திரன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மரு.டி.கலைவாணி, கோட்ட கலால் அலுவலர்கள், வருவாய் வட்டாட்சியர்கள் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.