DSWO – AVVAIYAR AWARD
செ.வெ.எண்:-39/2024
நாள்: 14.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
சர்வதேச மகளிர் தின விழாவில் 2025ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருது பெற திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்த சேவை புரிந்தவருக்கு 2025 ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறுபவருக்கு ரூ.1.50 இலட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மேற்பாடி விருதிற்கு கீழ்கண்ட தகுதியான நபர்களிடம் இருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது. தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) விண்ணப்பித்து கருத்துருவினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 31.12.2024 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்விருது பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும். பெண்களுக்கான இச்சேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.· இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு, கையேடாக தயார் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பிட வேண்டும் இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.