DSWO(Special Camp For Transgenders)
செ.வெ.எண்:-30/2025
நாள்:-08.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
திருநங்கைகள் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(08.07.2025) நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் நோக்கில், அவர்களின் துயரை துடைக்க, பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்.
பெண்களைப் போல மூன்றாம் பாலினத்தவரையும் சமுதாயம் மதிக்கும் வகையில், அவர்களை கண்ணியத்துடன் அழைக்க வேண்டும் என்னும் எண்ணத்தின் வெளிப்பாடாக “திருநங்கை” என்ற மரியாதைக்குரிய சொல் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அங்கீகாரத்தை வழங்கி அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் நல வாரியம் 15.04.2008-ல் சமூக நலத்துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இந்நல வாரியமானது 02.04.2025 அன்று திருத்தியமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
திருநங்கைகள் நல வாரியத்தின் வாயிலாக அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, மருத்துவக் காப்பீட்டு அட்டை, தையல் இயந்திரம், சொந்த தொழில் தொடங்கிட மானியம், சுய உதவிக்குழுக்கள் அமைத்து பயிற்சி அளித்தல், தொழில் சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 வீதம் ஓய்வூதியத் தொகை, திருநங்கைகள் உயர்கல்வி படிக்க கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் அனைத்து கட்டணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நலவாரியத்தின் மூலம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் துவங்க மானியத் தொகை வழங்குதல், சுய உதவிக்குழு பயிற்சி மற்றும் மானியத் தொகை, காப்பீட்டுத் திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்கிட ஏதுவாக சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் இன்று(08.07.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் 37 திருநங்கைகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், 15 திருநங்கைகளுக்கு ஆதார் திருத்தம், 3 திருநங்கைகளுக்கு E-SHRM அட்டை பதிவுகள், 1 திருநங்கைக்கு ஆயூஸ்மான் அட்டைகள் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
மேலும், ”திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக க.ர.கோகிலகிருஷ்ணன் என்ற திருநம்பிக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தில் தகவல் தொழில்நுட்ப பணியாளர் பணி நியமன ஆணையினை” மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் .
மேலும், இம்முகாமில் வேலை வாய்ப்பு வேண்டி திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் விண்ணப்பம் வழங்கினார்கள். முதியோர் உதவித்தொகை பெற மனுக்களும் பெறப்பட்டது.
இம்முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி பெ.விஜயராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.