Close

Education Loan Fair 2025-26 Training Camp

Publish Date : 18/08/2025
.

செ.வெ.எண்:- 60/2025

நாள்:-13.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

அனைத்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளும் இணைந்து நடத்தும் P.M.வித்யாலட்சுமி போர்டல் கல்விகடன் மேளா 2025-26 பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(13.08.2025) அனைத்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளும் இணைந்து நடத்தும் P.M.வித்யாலட்சுமி போர்டல் கல்விகடன் மேளா 2025-26 பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

+2 வகுப்பு படித்து முடித்துவிட்டு உயர்கல்விக்கு செல்கின்ற மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இதில் முக்கியமான பெண்கள் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை வேறு மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விவசாயம் சார்ந்த மாவட்டமாக திகழ்கிறது. திண்டுக்கல் மாவட்டம் மற்ற மாவட்டங்களை போல தொழிற்சாலை நிறைந்த மாவட்டமாக இல்லை. +2 வகுப்பு படித்து முடித்துவிட்டு அனைத்து மாணவ, மாணவியர்களும் உயர்கல்வியில் சேர வேண்டும் என்ற நோத்தின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கலில் கடந்த 15 நாள்களுக்கு முன்னர் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களின் சார்பில் 111 நபர்களுக்கு ரூ.20 இலட்சம் மதிப்பீட்டிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார வசதி குறைவான மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க கல்வி கடன் வழங்கப்படுகிறது.

உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவதற்காக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்வி கடன் குழு மற்றும் வாட்ஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவதற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலமாக மாணவர்களுக்கு கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள், விண்ணப்பம் பூர்த்தி செய்தல் ஆகியவை குறித்து தகவல் வழங்கப்படுகிறது. கல்வி கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களை இக்குழுவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கல்வி கடன் குறித்த தகவல் மற்றும் இணைக்க வேண்டிய ஆவணங்களை வங்கி அலுவலர்கள் தெளிவாக மாணவர்களிடம் தெரிவிக்க வேண்டும். கல்வி கடன் குறித்து மாணவர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தக்கூடாது. கல்லூரியில் படிக்கின்ற மாணவர்களுக்கு கல்வி கடன் விண்ணப்பிக்கும் போது எந்த வங்கியில் விண்ணப்பிக்கலாம் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்ற தகவல்களை கல்லூரி நிர்வாகம் தெளிவாக தகவல்களை வழங்க வேண்டும்.

கல்வி கடன் விண்ணப்பிக்கும் முன்பு அனைத்து ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் தகவல் தேவைப்பட்டால் இ-சேவை மையம் மற்றும் அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். கல்லூரியில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கடன் வழங்கப்படுகிறது என்ற தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். அதிகமான மாணவர்களுக்கு கல்வி கடன் சென்றடைய வேண்டும் என்ற நோகத்தின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் கல்லூரி கட்டணம் கட்டவில்லை என்பதற்காக சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு வழங்க இயலாது என்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதலாமாண்டு சேர்க்கை நடத்துவதற்கு முன்பாக கல்லூரி கட்டணம் மற்றும் கல்லூரியின் நிபதனைகளை மாணவர்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டும். கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் வேலைக்கு சென்றால் அது அவர்கள் படித்த கல்லூரிக்கு பெருமை என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இம்முகாமில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ர.சிவக்குமார், முதுநிலை மேலாளர் மாவட்ட முன்னோடி வங்கி நா.காமாட்சி ராஜா, வங்கி அலுவலர்கள், கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் ,கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.