Election- All party – Press – Meeting
செ.வெ.எண்:-48/2024
நாள்:-17.03.2024
திண்டுக்கல் மாவட்டம்
பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024 முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(17.03.2024) நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2024-க்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் நேர்மையான, அமைதியான, சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு உரிய ஒத்துழைப்பு வழங்கிட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டது.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் 20.03.2024 அன்று தொடங்கி 27.03.2024 வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் பரிசீலனை 28.03.2024 அன்று நடைபெறும். வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் 30.03.2024 ஆகும். வாக்குப்பதிவு 19.04.2024 அன்றும் வாக்கு எண்ணிக்கை 04.06.2024 அன்றும் நடைபெறும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் வாக்காளர்களின் விபரம் வருமாறு:-
127-பழனி சட்டமன்ற தொகுதியில் 323 வாக்குச்சாவடிகளும், 1,30,582 ஆண் வாக்காளர்கள், 1,37,079 பெண் வாக்காளர்கள், 55 இதரர்கள் என மொத்தம் 2,67,716 வாக்காளர்களும், 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 282 வாக்குச்சாவடிகளும், 1,13,278 ஆண் வாக்காளர்கள், 1,21,390 பெண் வாக்காளர்கள், 9 இதரர்கள் என மொத்தம் 2,34,677 வாக்காளர்களும், 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும், 1,39,206 ஆண் வாக்காளர்கள், 1,50,493 பெண் வாக்காளர்கள், 25 இதரர்கள் என மொத்தம் 2,89,724 வாக்காளர்களும், 130-நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளும், 1,19,473 ஆண் வாக்காளர்கள், 1,24,713 பெண் வாக்காளர்கள், 16 இதரர்கள் என மொத்தம் 2,44,202 வாக்காளர்கள்,
131-நத்தம் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடிகளும், 1,38,662 ஆண் வாக்காளர்கள், 1,45,322 பெண் வாக்காளர்கள், 66 இதரர்கள் என மொத்தம் 2,84,050 வாக்காளர்கள், 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடிகளும், 1,34,244 ஆண் வாக்காளர்கள், 1,42,825 பெண் வாக்காளர்கள், 47 இதரர்கள் என மொத்தம் 2,77,116 வாக்காளர்கள், 133-வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளும், 1,31,199 ஆண் வாக்காளர்கள், 1,37,716 பெண் வாக்காளர்கள், 3 இதரர்கள் என மொத்தம் 2,68,918 வாக்காளர்கள் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2.121 வாக்குச்சாவடிகளும், 9,06,644 ஆண் வாக்காளர்கள், 9,59,538 பெண் வாக்காளர்கள் 221 இதரர்கள் என மொத்தம் 18,66,403 வாக்காளர்கள் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 193 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் அதிக பதற்றமான வாக்குச்சாவடிகள் 147 மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகள் 46 எனவும் கண்டறியப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் செலவினங்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் பொருட்டு, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும்படை குழுக்கள், தலா 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் தலா ஒரு வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பழனி(கொடைக்கானல்) பகுதிக்கு தலா 3 பறக்கும்படை, 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், ஒரு வீடியோ கண்காணிப்புக்குழு என மொத்தம் 24 பறக்கும் படைகள், 24 நிலையனா கண்காணிப்புக் குழுக்கள், 8 வீடியோ கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, பழனி சட்டமன்ற தொகுதிக்கு 24 குழுக்கள், பழனி(கொடைக்கானல்) பகுதிக்கு 20, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு 30, ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்கு 32, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு 27, நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு 33, திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு 29, வேடசந்துார் சட்டமன்ற தொகுதிக்கு 29 என மொத்தம் 217 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் தொடர்புடைய புகார்கள் தெரிவிப்பதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைதளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தொலைபேசி எண்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை, 1800 599 4785 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 0451-2400162, 0451-2400163, 0451-2400164, 0451-2400165 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மேலும், 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், CVigil என்ற பொதுமக்கள் செயலி மூலமும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். பொதுத்தேர்தலை அமைதியான முறையில் நடைபெறுவதற்கு, பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தங்கள் வாக்குப்பதிவை செய்திட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திருமதி ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) திருமதி கே.கனகவள்ளி மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.