Close

Election – flying Squad Team

Publish Date : 19/03/2024

செ.வெ.எண்:-47/2024

நாள்:-16.03.2024

திண்டுக்கல் மாவட்டம்

ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை நாள் எண். ECI/PN/23/2024 நாள் 16.03.2024-ல் இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து (16.03.2024) தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது.

பாரபட்சமற்ற ஆரோக்கியமான, அமைதியான முறையில் தேர்தல் நடத்திடவும், தேர்தல் நேரத்தில் முறையற்ற வகையில் பணம் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் அளித்து பொதுமக்களை தவறான வழியில் ஓட்டு அளிக்க தூண்டுவதனை தடுத்திடும் பொருட்டும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, ரூ.50,000-க்கு மேல் ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்கள், போதைப்பொருட்கள், சுவரொட்டிகள், பதாகைகள், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை வாகனங்களிலோ, பிற வகைகளிலோ எடுத்துச் செல்லும் நேர்வுகளில் மேற்படி குழுக்களால் ஆய்வின் பொழுது வாக்காளர்களைக் கவரும் வகையில் கொண்டு செல்வது உறுதி செய்யப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும்.

எனவே, ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லும் போது பொதுமக்கள், வணிகர்கள் அதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் கொண்டு செல்லவேண்டும். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் மேற்கண்ட இனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட இனங்களுக்கான நபர்கள் உரிய ஆதார ஆவணங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள அறை எண்: 186-இல் உள்ள மேல்முறையீட்டு அலுவலரான திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களிடம் மேல்முறையீடு செய்யலாம். பறிமுதல் செய்யப்படும் பொழுது காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட இனங்களில் நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரே உரிய வழிமுறைகளை பின்பற்றி பணம், பொருட்கள் திரும்ப வழங்கப்படும்.

எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மேற்சொன்ன விதிமுறைகளை தவறாமல் பின்பற்றிட வேண்டும், என திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.