Election Polling Stations
செ.வெ.எண்:-03/2024
நாள்:-02.09.2024
திண்டுக்கல் மாவட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் 20.08.2024 தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில், முதற்கட்டமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாக சென்று வாக்காளர்களின் விபரம் சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பட்டியல் தயாரிப்பில் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டதிலுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மூலம் 29.08.2024 அன்று வெளியிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய வாக்குச்சாவடி உருவாக்குதல், இடமாற்றம் செய்தல், வேறு கட்டடத்திற்கு மாற்றம் செய்தல், பெயர் திருத்தம் செய்தல், பகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஒரு வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,500-க்கு அதிகமாக இருப்பின் அந்த வாக்குச்சாவடியை பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைக்கப்படும். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு 2 கிலோ மீட்டர் துாரத்துக்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் புதிய வாக்குச்சாவடி ஏற்படுத்தப்படும்.
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் 05.09.2024-ஆம் தேதி வரை எழுத்துப்பூர்வமாக மனு அளிக்க வேண்டும். கோரிக்கை மற்றும் ஆட்சபணை ஏதேனும் வரப்பெற்றால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியான இனங்களாக இருப்பின் அக்கோரிக்கைகள் ஏற்கப்படும்.
இவ்வாறு தொகுதிவாரியாக வரப்பெறும் கோரிக்கைகள் தொகுக்கப்பட்டு, இறுதியாக வாக்குச்சாடிவகளில் மேற்கொள்ளப்பட வேண்டி மாற்றங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் கலந்தாலோசிக்கப்பட்டு இறுதி செய்து இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக பரிந்துரை செய்து அனுப்பப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.